அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆதவ் அர்ஜுனா, விஜய் மீது கொலைப்பழி சுமத்த முயன்றதாகவும், ராகுல் காந்தி போன் செய்ததால் ஸ்டாலின் பயந்ததாகவும் கூறினார். விஜய்தான் தமிழகத்தின் எதிர்காலம் என்றும், அதிமுக கூடாரம் காலியாகும் என்றும் பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்துமஸ் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று நடைபெற்ற 28ஆம் ஆண்டு விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், திருநெல்வேலி எம்.பி ராபர்ட் புரூஸ், விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் உள்ளிட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதனை காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.
24
தவெக ஆதவ் அர்ஜூனா
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக மூத்த நிர்வாகி விருப்ப ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் சிறப்பு விருந்தினராகவும், தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கேக் வெட்டி சிறப்புரை ஆற்றிய போது பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதாவது கரூரில் கொலைப்பழியை போட்டு பார்த்தார்கள். எப்படி இயேசுநாதர் சிலுவையில் அறைந்து அவர் மீது கொலைப்பழியை சுமத்த சூழ்ச்சியாளர்கள் நினைத்தார்களோ, அதேபோல, ஒரு தூய உள்ளத்தை கொண்ட எங்க தலைவர் விஜய் மீது கொலைப்பழியை சுமத்த பார்த்தார்கள்.
34
ராகுல்காந்தியிடம் முதல் போன் கால்
ஆனால் முதல் போன் கால் எங்கிருந்து வந்தது தெரியுமா? ராகுல் காந்தியிடம் இருந்து முதல் போன் கால் வந்தது. அதனால் தான் ஸ்டாலின் பயந்துவிட்டார். அவருக்கும் தெரியும் அங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு. இங்கு என்ன நடக்கும் என்று. பிரதர் ஐயம் ஆல்வேஸ் வித் யூ.. டோண்ட் வொர்ரி.. அவ்வளவு தான் ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார். டெல்லி முதற்கொண்டு எல்லா தலைவர்களும் பேசினார்கள். எதற்காக எங்கள் தலைவர்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பதை பாஜக முதல் உணர்ந்துவிட்டது.
அந்த வலிமை எங்கள் தலைவர் விஜய்யிடம் உள்ளது. எம்.ஜி.ஆர் பார்த்து நீங்கள் சொல்லிட்டு இருந்தீங்க அவருக்கு வாக்கு வலிமை இருக்கா.. பண பலம் இருக்கா.. சீனியர்ஸ் இருக்காங்களா என்று இதோ அண்ணன் செங்கோட்டையன் வந்தார் 55 வருஷ அனுபவம் கொண்டவர். அவருக்கு தெரியாதா. அவர் நினைச்சு இருந்தால் பாஜகவில் இணைந்து கவர்னர் ஆகியிருக்கலாம் அல்லது மத்திய அமைச்சர் ஆகியிருக்கலாம். அப்படி இல்லையென்றால் திமுகவிடம் நாளைக்கே அமைச்சர் ஆகியிருக்கலாம். ஏன் இங்கே வந்தார்? ஏனென்றால் தமிழ்நாட்டின் எதிர்காலம் எங்கள் தலைவர் விஜய். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் பார்த்த செங்கோட்டையன் விஜய்யை பார்த்து வந்தார் என்றால் விஜய்தான் அடுத்த எதிர்காலம். அதை செங்கோட்டையன் உணர்ந்தார். இன்னும் பல பேர் வர ரெடியாகிட்டு இருக்காங்க.. இன்னும் கொஞ்ச நாளில் அதிமுக கூடாரம் இருக்குமான்னே தெரியாது என்று பேசியுள்ளார்.