அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் விலகி வரும் நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை அழித்து வருவதாக அரசியல் விமர்சகர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுகவில் மூத்த நிர்வாகியுமாக இருந்து வந்த செங்கோட்டையன் தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. செங்கோட்டையன் தவெகவில் இணையவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
24
அதிமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு
அந்த வகையில் அரசியல் விமர்சகரும், மூத்த ஊடகவியலாளருமான மணி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தால் அது அதிமுகவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். மேலும் தவெகவுக்கும் மூத்த, அனுபவமிக்க அரசியல் பிரமுகர் கிடைத்துவிடுவார்.
34
ஜெயலலிதாவை விடவா நீங்கள் பெரிய தலைவர்..?
எடப்பாடி தலைமையை ஏற்காமல் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அலகுராஜ், மைத்ரேயன், அன்வர் ராஜா என அடுத்தடுத்து பல முக்கிய நிர்வாகிகள் சென்றுவிட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு ஆளுமை மிக்க தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜானகி அணியைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவை மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தனர். அதே நேரத்தில் அவர்கள் அனைவரும் மீண்டும் ஜெயலலிதா தலைமையின் கீழ் பணியாற்ற விருப்பம் தெரிவித்ததும் ஒருவரு விடாமல் அனைவரையும் கட்சியில் சேர்த்து அவர்களுக்கு மந்திரி பதவியும் வழங்கினார்.
இது தான் தலைமைக்கான பண்பு. இப்படி செய்தால் தான் கட்சி பலமடைய முடியும். அதே போன்று மூத்த நிர்வாகியாக இருந்த முத்துசாமி கட்சியை விட்டு வெளியேற நினைத்தபோது அவருக்கு தன் கைப்பட கடிதம் எழுதி கட்சியில் தொடருங்கள் என ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். அவரை விடவா பழனிசாமி மிகப்பெரிய ஆளுமை..? அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டு என்ன செய்யப் போகிறீர்கள்..? கிட்டத்தட்ட அனைவரும் உங்கள் காலில் விழாத குறையாக கட்சியில் சேர வேண்டும் என சொல்கிறார்கள். அவர்களை சேர்த்துக் கொள்வதில் என்ன பிரச்சினை உள்ளது..?
இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது அதிமுகவின் கதையை பழனிசாமி முடித்து வைத்துக்கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.