ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன், 'ஈகோ' எனும் எதிரி அழிவுக்கு வழிவகுக்கும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதிமுக இணைப்புக்கு இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த பதிவு அவரைக் குறிவைப்பதாக பேசப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது அதிமுக குறித்த கருத்துக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பூங்குன்றன் போட்டுள்ள பதிவு ஒன்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
25
ஈகோ அழிவு பாதைக்கு அழைத்து செல்லும்
அதில், அரசியல் தலைவராக இருந்தாலும், ஆன்மீக மடாதிபதியாக இருந்தாலும் அல்லது சாதாரண மனிதராக இருந்தாலும், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பொது எதிரி இருக்கிறது. அது வெளியில் இருந்து வரும் எதிரி அல்ல..! நம்முள் மறைந்து இருக்கும் ஒரு எதிரி. அந்த எதிரியின் பெயர் ஈகோ. ஈகோ என்பது “நான் தான் சரி”, “எனக்கு எல்லாம் தெரியும்”, “நான் செய்யும் காரியத்தை யாரும் கேள்வி கேட்கக் கூடாது” என்ற எண்ணத்தை உருவாக்கும். இந்த எண்ணம் ஆரம்பத்தில் சக்தி போல தோன்றினாலும், காலப்போக்கில் அது நம்மை அழிவின் பாதைக்கு இழுத்துச் செல்லும். ஈகோ வந்தால் என்ன ஆகும்? ஆலோசனை கேட்க வேண்டிய இடத்தில் கூட நாம் தனியாக முடிவெடுக்கிறோம்.
35
சிறப்பாக செயல்படுவதை பார்த்தால் பொறாமை
நமது தவறுகளை ஒப்புக்கொள்ளாமல், அதை மறைக்க முயல்கிறோம். பிறர் நம்மைவிட சிறப்பாக செயல்படுவதை பார்த்தால் பொறாமை உருவாகிறது. மனதில் “நான் தான் பெரியவன்” என்ற உணர்வு வளர்ந்து, அன்பும் பணிவும் குறைகிறது. இது எந்தத் துறையிலும் நம்மை மெதுவாக வீழ்ச்சி பக்கம் அழைத்துச் செல்லும்..! ஈகோ வைத்திருக்கும் மனிதன் எப்போது தவறு செய்கிறான் என்று அவனே அறிய மாட்டான். ஆனால் காலம் மட்டும் அந்த தவறுகளை கணக்கில் வைத்தே இருக்கும்.
ஒரு நாள் தோல்வி வந்து கதவைத் தட்டும். அந்த வலி தான் உண்மையை உணர வைக்கும். அப்போது தான் நம்முள் ஒரு குரல் எழும், “இவ்வளவு அகங்காரத்தை வைத்திருக்காமல் முன்பே சற்று பணிவுடன் நடந்திருந்தால் இன்று நான் வெற்றி பெற்றிருப்பேன்…” இந்த உணர்ச்சியே சிலருக்கு திருத்தம் தரும். ஆனால் பலருக்கு அது திரும்ப முடியாத இழப்பாக மாறிவிடும். ஈகோவை விட்டு விட்டால் வாழ்க்கை எவ்வளவு லேசாகிப் போகிறது தெரியுமா?
யாரிடமும் கற்றுக்கொள்ளத் தயங்க மாட்டோம். குறைகள் இருந்தால் அதை ஏற்று திருத்திக் கொள்ளலாம். உண்மையான அன்பும் மதிப்பும் சுற்றியுள்ளவர்களிடமிருந்து கிடைக்கும். நாம் எப்படியும் முன்னேறிக் கொண்டே இருப்போம். தற்பெருமையை விட்டுவிட்டால் மனம் சுதந்திரமாகிறது. பணிவாக இருந்தால் வெற்றி நம்மைத் தேடித் வரும். ஈகோ என்பது பூட்டப்பட்ட கதவைப் போல..! அதின் பின்னால் நம் வளர்ச்சி, நம் வெற்றி, நம் மகிழ்ச்சி எல்லாம் இருக்கிறது. அந்த கதவைத் திறக்கும் ஒரே சாவி பணிவு. அதனால், எந்த நிலையிலிருந்தாலும் நம் உள்ளம் எப்போதும் சீராக, எளிமையாக, பணிவாக இருக்கட்டும். ஈகோவிலிருந்து தப்பித்த மனிதன் மட்டுமே உண்மையான வெற்றியாளன். E—Go வந்தவுடன் அதை நாம் E—Rase செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
55
எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஒற்றிணைய வேண்டும் என மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறிவந்ததை அடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து தற்போது தவெக இணைந்துள்ளார். அதிமுக ஒற்றிணையும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வரும் நிலையில் பூங்குன்றனின் ஈகோ தொடர்பான பதிவு இபிஎஸ் குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.