
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது அதிமுக குறித்த கருத்துக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார்கள். பலருக்கு கிடைக்கும் என்று ஆருடம் சொன்னார்கள். ஆருடம் சொன்னவற்றில் ஒன்று பலித்தது. அது இன்பதுரை அவர்கள். இன்னொன்று நான் பார்த்து அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்ட ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. அது தனபால் அவர்கள். இருவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அன்புச்சகோதரர் இன்பதுரை அவர்களை தெரிந்திருக்கும் அளவிற்கு தனபால் அவர்களை இப்போதைய தொண்டர்கள் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அடுத்தடுத்த தலைமுறையினர் வந்துவிட்டதால் நிகழ்காலத்தில் நிழலாடுகிறவர்களை தெரிந்து வைத்துக்கொள்ளும் அளவிற்கு கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பழையவர்களை தெரிந்து வைத்துக்கொள்வது கடினமே. செங்கல்பட்டை சுற்றி இருக்கும் மாவட்டங்களுக்கு தனபால் நன்கு அறிமுகமானவர். தனபால் அவர்கள் திருப்போரூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 1991 சட்டப்பேரவை தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
2006 ஆம் ஆண்டு தேர்தலில் நின்று தோல்வி அடைந்தவர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கழகத்தின் முக்கிய பொறுப்புகளில் அவர் தொடர்ந்து சலிக்காமல் பணியாற்றி வந்தார். அதிர்ந்து பேசாதவர். அன்பு மிகுந்தவர். வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று தேங்கி நிற்காமல் தொடர்ந்து கட்சியினுடைய வளர்ச்சிக்காக ஓடிக்கொண்டிருந்தவர். விசுவாசத்திற்கு ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும் என்று தன்னை மெருகேற்றிக் கொண்டவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இவ்வளவு படித்தாரா? என்பது எனக்கு தெரியாது.
ஆனால் தற்போது அவருடைய படிப்பை பார்க்கும்போது நெஞ்சம் நெகிழ்ச்சி கொண்டது. தொடர்ந்து தன்னை தயார்படுத்திக் கொண்டே வந்திருக்கிறார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளை தொட்டுவிட்ட பிறகு சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார். அன்புச் சகோதரரின் மனைவி காயத்ரி தனபால் அவர்களும் தற்போது புதுப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவராக செயலாற்றிக் கொண்டு இருக்கிறார். அவரும் இப்போது வேகமாக கட்சிப் பணியில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். யாரோ ஒருவருக்கு கிடைத்து விட்டதாக யாரும் கவலைப்பட வேண்டாம். உழைத்து தேய்ந்து கொண்டிருந்த ஒருவருக்குத்தான் இன்று உரம் போடப்பட்டிருக்கிறது. அந்த உரம் கழகத்தின் வளர்ச்சிக்கான உரம் என்று நான் நினைக்கின்றேன்.
கழகத்தினுடைய வளர்ச்சிக்காக ஓடிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு தேவை பொறுமை, நம்பிக்கை. வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று புலம்பி கொண்டு இருக்காதீர்கள். கிடைத்தவர்களை வசைபாடிக் கொண்டிருக்காதீர்கள். வாய்ப்பு கொடுத்த தலைமையை தூற்றிக் கொண்டு இருக்காதீர்கள். உயர்வு கிடைக்கும் வரை உங்களுடைய உடலையும் மனதையும் பேணி காப்பாற்றுங்கள். உங்களுக்கும் ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஓடிக்கொண்டே இருங்கள். விசுவாசம் உங்களை ஒரு நாள் உயர்த்தும் என்று பொறுமையோடு காத்திருங்கள். காத்திருக்க பழகு! நிச்சயம் ஒருநாள் நல்லது நடக்கும் என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.