தக்காளி, வெங்காயம் விலை குறைய போகுது.! இனி இவ்வளவு தான் விலை - வெளியாக போகுது சூப்பர் அறிவிப்பு

First Published Oct 7, 2024, 2:19 PM IST

தமிழகத்தில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மழை மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக வரத்து குறைந்து விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் முக்கிய முடிவு எடுக்கவுள்ளது. 
 

உச்சத்தில் தக்காளி, வெங்காய விலை

தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சமையலுக்கு தக்காளி மற்றும் வெங்காயம் முக்கிய தேவையாக உள்ளது. இந்த இரண்டும் இல்லாமல் உணவு சமைப்பது என்பது சவலான விஷயமாகும்.

அந்தளவிற்கு சமையலோடு இணைந்து இருப்பது தக்காளியும் வெங்காயமும், ரசம் வைப்பது முதல் பிரியாணி சமைப்பது வரை தக்காளியின் பங்கு தேவையாக உள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிடு, கிடுவென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஓட்டல் முதல் வீடு வரை தக்காளி சட்னி தயாரிப்பது நிறுத்தப்பட்டது.

தக்காளி வரத்து குறைந்தது

மேலும் தக்காளி தேவைப்படாத உணவு வகைகளை தேடி தேடி சமைக்கும் நிலையும் உருவாகி விட்டது. மழை, விளைச்சல் பாதிப்பு காரணமாக பிற மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்ததால் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையான  கோயம்பேடுக்கு நாள் ஒன்றுக்கு 60 முதல் 80 லாரிகளில் தக்காளி வரத்து வந்த நிலையில்  நேற்று வரை 40 முதல் 50  லாரிகளில் மட்டுமே தக்காளி வரத்து இருந்தது.

இதனால் தக்காளி விலை ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே சில்லரை கடைகளில் 100 முதல் 120 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இன்னமும் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Latest Videos


வெங்காய விளைச்சல் பாதிப்பு

இதே போல வெங்காயத்தின் தேவையும் சமையலில் முக்கிய பங்கு உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 30 முதல் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாசிக்கில் வெங்காயத்தின் வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது மஹாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயத்தின் விளைச்சல் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டது.

மற்றொரு பக்கம் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கும் அனுமதி கொடுத்ததால் விலையானது அதிகரித்துள்ளது. இந்தநிலையில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு வெங்காயம் கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

onion

விலையை குறைக்க நடவடிக்கை

இருந்த போதும் வெங்காயம் உற்பத்தி குறைவின் காரணமாக விலையானது இன்னும் குறையாமல் உள்ளது. வருகிற ஜனவரி மாதம் வரை இதே நிலை நீடிக்கும் என கூறப்படுகிறது. அதே போல தக்காளியின் விலையையும் குறைக்க மத்திய அரசு சில்லரை வணிகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதே போல தமிழக அரசும் தக்காளியின் விலையை குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தக்காளி விலையானது உச்சத்தை அடைந்த போது குறைவான விலையில் தமிழக அரசு தக்காளியை விற்பனை செய்தது. எனவே இந்த முறையும் மக்களுக்கு உதவிடும் வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தை குறைந்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tomato

ரேஷன் கடையில் தக்காளி விற்பனை

இதனையடுத்து ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை கடந்துள்ள நிலையில், பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் முதல் கட்டமாக 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசின் அதிகாரிகள்  ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. .  மேலும் ரேஷன் கடைகளில் கடந்த முறை தக்காளி விநியோகம் செய்தது போல் இந்த முறையும் விற்பனை செய்யலாமா என ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்,  நாளை அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு தக்காளியை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது

click me!