அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. செங்கோட்டையன் பல கட்சி நிகழ்வுகளைப் புறக்கணித்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் தனது நிலைப்பாட்டை விளக்கவுள்ளார்.
அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராகவும். கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவராகவும் உள்ளார் செங்கோட்டையன், இந்த நிலையில் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி இடையேயான மோதல், அ.தி.மு.க. கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அந்த வகையில் கடந்த பிப்ரவரியில் கோவையில் நடைபெற்ற அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில், எடப்பாடி பழனிசாமி புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறாததை காரணம் காட்டி செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
24
எடப்பாடியை புறக்கணிக்கும் செங்கோட்டையன்
அப்போதே தலைமைக்கு எதிராக கருத்துகளை கூறி வந்தார். செங்கோட்டையன், அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தாலும், இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற பல முக்கிய கட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தார். ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டங்கள், மற்றும் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” பிரச்சார தொடக்க விழா போன்றவற்றையும் அவர் தவிர்த்தார்.
இபிஎஸ் தலைமையை விமர்சிக்கும் வகையில் மறைமுகமாகவும் நேரடியாகவும் கருத்துகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு தகவல் தெரிவிக்காமல் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகிகள் மாற்றங்கள், அவரது அதிருப்திக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
34
நிர்வாகிகளை மாற்றிய இபிஎஸ்
அந்தியூர் தொகுதி தோல்விக்கு செங்கோட்டையனை இபிஎஸ் குற்றம்சாட்டியதாகவும், இதனால் ஈரோடு மாவட்டத்தில் இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளை முக்கிய பொறுப்புகளில் நியமித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
செங்கோட்டையனின் இந்த நடவடிக்கைகள், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. மேலும், செங்கோட்டையன் ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன், அல்லது சசிகலாவுடன் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்று செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசவுள்ளார். அப்போது அதிமுக தலைமைக்கு எதிராக கருத்துகளை கூற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.எனவே இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமைக்கு எதிராக செயல்பாடு காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை வட்டார தகவல் வெளியாகியுள்ளது.