
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்று. 1969-ல், கட்சியின் நிறுவனர் அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு மு. கருணாநிதி திமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக நீதி, தமிழ் மொழி, மற்றும் கலாச்சாரத்திற்காக பாடுபட்டவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.
கருணாநிதி 1969 முதல் 2018 வரை திமுகவின் தலைவராக இருந்தார், தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும் அசத்தியுள்ளார். அதே நேரம் கட்சியில் முக்கிய பொறுப்பு மற்றும் தலைமை பொறுப்புகளில் கருணாநிதி குடும்பத்தினரே இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தற்போது இன்பநிதி வரை வாரிசு அரசியல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் மத்திய அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் தயாநிதி மாறன் அரசியல் களத்தில் இறங்கி தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சராக பதவியேற்றார். மத்தியில் முக்கிய பொறுப்பு வகித்த தயாநிதி மாறன் 2019 மற்றும் 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, மதுரைப் பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். இவரும் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தார். திமுகவில் தென் மண்டல தலைவராகவும் அழகிரி திகழ்ந்தார். ஆனால் ஸ்டாலினுடனான உட்கட்சி மோதல்கள் காரணமாக 2014-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது கருணாநிதியின் மகன்களிடையே நடந்த வாரிசு மோதலால் உருவானதாக கூறப்பட்டது.
இதே போல கருணாநிதியின் மகள் கனிமொழி இவரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். 2007-ல் இராஜ்யசபை உறுப்பினராக அரசியலில் நுழைந்தார். இதனையடுத்து தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். திமுகவின் துணை பொதுச்செயலாளராகவும் கனிமொழி உள்ளார். இந்த வாரிசு அரசியல் மத்தியில் கருணாநிதியே தனது அரசியல் வாரிசு என கூறியது மு.க.ஸ்டாலினை தான்.
ஸ்டாலினும் படிப்படியாக கட்சியில் தலைவர் பதவியை அடைந்துள்ளார். 1967-ல், 14 வயதில், திமுகவின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 1973-ல் திமுக இளைஞரணியை உருவாக்கி, அதன் செயலாளராகப் பணியாற்றினார். 1984-ல் திமுக இளைஞரணியின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அடுத்தாக 1989-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1989, 1996, 2001, 2006, 2011, 2016, மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் தொகுதி சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற ஸ்டாலின், 2006-11 காலத்தில் கருணாநிதி ஆட்சியில், உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2009-ல் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இதே போல கட்சியிலும் படிப்படியாக ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.
2008-ல் திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டவர், 2017-ஆம் ஆண்டில் கருணாநிதியின் உடல்நலக் குறைவு காரணமாக, திமுகவில் செயல் தலைவராகப் பொறுப்பேற்றார். 2018-ஆம் ஆண்டுல் உடல் நிலை பாதிக்கப்பட்டு கருணாநிதி மறைந்ததையடுத்து திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளில் தேனியை தவிர 39 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுகவை வீழ்த்தி தமிழகத்தில் ஆட்சி அமைத்தார் ஸ்டாலின், இந்த சூழ்நிலையில் தனது மகன் அரசியலுக்கு வர மாட்டார் என கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஸ்டாலின் தெரிவித்த நிலையில் 2018ஆம் ஆண்டு அரசியல் நிகழ்வில் தலைகாட்ட தொடங்கிய உதயநிதி,
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த தேர்தலில் கிடைத்த வெற்றியையடுத்து திமுகவில் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்பட்டது. அடுத்ததாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
அடுத்தாக இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்ட ஒரு சில மாதங்களில் துணை முதலமைச்சர் பொறுப்பும் உதயநிதிக்கு தேடி வந்தது. இந்த நிலையில் திமுகவில் அடுத்த வாரிசாக உதயநிதியின் மகன் இன்பநிதி அரசியில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். திமுக மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் திமுக சின்னம் பதித்த கொடியோடு கலந்து கொண்டார்.
மேலும் தனது தந்தையும் துணை முதலமைச்சருமான உதயநிதி கலந்து கொண்ட விளையாட்டு நிகழ்வுகளிலும் ஆர்வமோடு பங்கேற்றார். இந்த நிலையில் திமுகவில் ஸ்டாலின், அழகிரி, உதயநிதி ஆகியோர் கவனித்த வந்த முரசொலி பத்திரிக்கையை தொடர்ந்து தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் தலைமை நிர்வாகியாக இன்பநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரனும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, 21, லண்டனில் நிதி நிர்வாகம் தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதனையடுத்து கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகப் பொறுப்பில் கடந்த ஜூன் 3, 2025 அன்று, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளன்று இணைந்துள்ளார்.
இதனையடுத்து சென்னை அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்திற்கு தினமும் காலை 11 மணிக்கு வரும் இன்பநிதி மாலை 6 மணி வரை பணிபுரிகிறார். தற்போது கலைஞர் தொலைக்காட்சியின் நிதி நிலைமை, புதிய திட்டங்கள் தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. எனவே திமுகவின் அடுத்த அரசியல் வாரிசு உதயமாகிவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.