Published : Feb 24, 2026, 01:13 PM ISTUpdated : Feb 24, 2026, 01:30 PM IST
School College Holiday: அய்யா வைகுண்டசாமியின் 194-வது பிறந்த நாள் விழா மார்ச் 4ம் தேதியை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். இந்நிலையில் அரசு விடுமுறையை தவிர்த்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
25
அய்யா வைகுண்டரின் பிறந்த நாள்
இந்நிலையில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டரின் பிறந்த நாள் ஒவ்வொரு வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அய்யா வைகுண்டசாமியின் 194-வது பிறந்த நாள் விழா மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
35
மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை
இதுதொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: அய்யா வைகுண்டசாமியின் 194வது பிறந்த நாள் விழா மார்ச் 4ம் தேதி புதன் கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. மேற்படி மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
55
மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலைநாள்
மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.