Tamil Nadu Heavy Rain
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி, நெல்லூர் இடையே சென்னை அருகே வியாழன் கிழமை அதிகாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.
Heavy Rain in Chennai
இதன் தொடர்ச்சியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்துர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Deputy CM Udhayanidhi Stalin
விடுமுறை
கனமழை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கிய சேவைத் துறையில் பணியாற்றும் அரசுத் துறையைத் தவிர பிற அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
CM Stalin
கனமழை காரணமாக சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையம் மற்றும் திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூம்களை முதல்வர் ஸ்டாலின் இரவில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் காணொலி வாயிலாகக் கேட்டறிந்தார்.
தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 4 நாட்கள் வீடுகளில் இருந்தே வேலை.! முதலமைச்சர் அதிரடி
Heavy Rain
இதே போன்று களத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்ட துணைமுதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், சென்னையில் தொடர் ஆய்வுகளை நடத்தி வருகிறோம். திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஓட்டேரி பகுதிக்குச் சென்று சற்று நேரத்துக்கு முன் மழை நிலவரத்தை நேரில் பார்வையிட்டோம்.
அப்போது, திடீர் நகர்ப் பகுதியில் அரசுடன் இணைந்து தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் பணியைப் பாராட்டினோம். மேலும் அவர்களின் அழைப்பை ஏற்று அவர்களோடு இணைந்து நாமும் பொதுமக்களுக்கு உணவு வழங்கினோம்.
ஓட்டேரி பகுதியில் உள்ள மோட்சம் திரையரங்கு சாலையில் மழை நீரை வெளியேற்றும் பணிகளையும் - ஓட்டேரி நல்லான் கால்வாயில் மழை நீர் வெளியேறுவதையும் ஆய்வு செய்து அதிகாரிகள் - பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.