பெண்களுக்கான திட்டங்கள்
தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், திருமண நிதி உதவித் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான உதவி திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், அரசு சேவை இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், மகளிர் உரிமை தொகை, கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்
மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களது சொந்த காலில் நிற்கும் வகையில் மானிய திட்டத்தில் கடனுதவி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பெண்களுக்காக நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தமிழக அரசு சார்பாக நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற ஏழை விதவைகள், கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களின் மேம்பாட்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு நான்கு வார வயதுடைய 40 அசில் இனக்கோழிக்குஞ்சுகளை கொள்முதல் செய்ய 50% மானியம் வழங்கப்படும்.
38 ஆயிரம் பெண்களுக்கு பயன்
இந்த நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 38 ஆயிரம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கால்நடை பராமரிப்பு துறை மூலமாக நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தகுதி அளவுகோல்கள்
பயனாளி ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும்.
விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
செயல்படுத்தப்படும் இடம்
சென்னையை தவிர (புனித தோமையார் மலை) அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 100 பயனாளிகள் என திட்டம் செயல்படுத்தப்படும்.
பயனாளி 50% பங்களிப்புத் தொகையான ரூ.1600 வழங்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30% பேர் SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
* முதல்வர் முகாம் மூலம் மக்களுடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
* அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் அல்லது கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம்.