கான்கிரீட் வீடுகள் கட்ட 3,50,000 ரூபாய்.! ஒரு லட்சம் புதிய வீடுகள்- அசத்தல் திட்டத்தை அறிவித்த தமிழக அரசு

First Published | Nov 22, 2024, 8:12 AM IST

தமிழக அரசு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.3.50 லட்சம் நிதியுதவி வழங்குகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சிமெண்ட் வீடு இல்லாதவர்கள் தகுதியுடையவர்கள். 360 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டப்படும்.

தமிழக அரசின் திட்டங்கள்

தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் பயன் அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்கள் முதல் முதியோர்கள் வரை பயன் பெறும் வகையில் நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில்  ஏழை மக்களின் கனவாக இருப்பது சொந்த வீடு கட்ட வேண்டும், அதுவும் கான்கிரீட்டில் வீடு கட்ட வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

அதற்காகவே தமிழக அரசு சார்பாக கான்கிரீட் வீடுகள் கட்ட 3.50 லட்சத்தை அள்ளிக்கொடுக்கிறது. அந்த வகையில் இந்த நடப்பு ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் தமிழ்நாட்டின் அனைத்துக் குடிமக்களும் இத்திட்டத்தின் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். 

கலைஞர் கனவு இல்லம்

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3500 கோடி ரூபாயில் 1 இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளாதக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு 3,50,000 ரூபாய் வீதம் மொத்தம் 3,500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (Single Nodal Account-SNA) மூலம் தொகை நேரிடையாக பயனாளிகளுக்கு நிதியானது விடுவிக்கப்பட்டு வருகிறது.
 

Tap to resize

பயனாளிகள் தேர்வு செய்யப்படும் முறை

வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயன்களைப் பெற தகுதியுடையவர்கள். இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற விண்ணப்பதாரர்கள் செங்கல் மற்றும் சிமெண்டால் செய்யப்பட்ட வீடு வைத்திருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீட்டின் விவரம்

இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடு 360 சதுர அடி பரப்பளவில் சமையலறையுடன் கட்டப்பட வேண்டும்.300 சதுர அடியில் சிமென்ட் கூரையாகவும், மீதமுள்ள 60 சதுர அடியில் தீப்பிடிக்காத கூரையாகவும் பயனரின் விருப்பப்படி அமைக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுவர் செங்கல், இன்டர்லாக் கல்லால் செய்யப்பட வேண்டும் என விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைய தேவையான ஆவணங்களாக ஆதார் அட்டை, செல்போன் எண், வாக்காளர் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை, வீட்டு முகவரி போன்றவையாகும்
 

குறைந்த விலையில் சிமெண்ட்

தற்சமயம் வரை முதற்கட்டமாக அரசால் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு. இதுவரை பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.252 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதவிர பயனாளிகள் பயனைடயும் வகையில், குறைந்த விலையில் சிமெண்ட் மூட்டைகளும் TANCEM நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருவதாகவும் இதற்காக ரூ.48 கோடி செலவினம் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதே போன்று. இரும்பு கம்பிகள் (Steel) நடைமுறையில் olron விதிகளைப் பின்பற்றி ஒப்பந்த புள்ளி இறுதி செய்து உரிய விற்பனையாளரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் வீடுகள் கட்டி முடிக்கப்படும்

கலைஞரின் கனவு இல்லம் 2024-25 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வீடுகள் அனைத்தும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் ஏற்கனவே. ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும், ரூ.500 கோடி வழங்கப்பட்டு வீடுகளின் கட்டுமானத்திற்கேற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுளது.  

கலைஞரின் கனவு இல்லம் 2024-25 திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளின் கட்டுமான பணிகளும் நல்ல முன்னேற்றத்தில் உள்ளதால், இந்நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வா அரசால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!