சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய கார்டு.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

First Published | Nov 22, 2024, 7:04 AM IST

சென்னை மாநகராட்சி சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்க உள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் நவம்பர் 22 முதல் 30 வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நடைபெறும்.

தமிழக அரசின் திட்டங்கள்

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பயன் அடையும் வகையிலும் நிதி உதவி திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் முதியோர்கள் வரை பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் சென்னையில் உள்ளது. மிகப்பெரிய கடைகளில் பல ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்படும் பொருட்கள் சாலையோர கடைகளில் சில நூறு ரூபாய்களில் கிடைக்கும்.
 

சாலையோர வியாபாரிகளுக்கு புதிய திட்டம்

அந்த வகையில் தினந்தோறும் சிறிய அளவில் நடைபெறும் வியாபாரத்தின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டத்தை சென்னை மாநாகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன் படி Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos


இன்று முதல் சிறப்பு முகாம்

இதற்கான  சிறப்பு முகாமானது இன்று (22.11.2024) முதல் 30.11.2024 வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல், சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நகர விற்பனைக் குழுவின் 06.11.2024 அன்று நடைபெற்ற 8வது கூட்டத்தில் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சிப் பொருத்திய ஐடி கார்டு

அதன் படி சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு (Weblink) பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்குவதற்காக 22.11.2024 முதல் 30.11.2024 வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
 

மொபைல், ஆதார் கட்டாயம்

மேற்கண்ட சிறப்பு முகாம்களில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும் எனவும்,  அந்த கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!