திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்ற கங்கை அமரனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ஏன் தடுத்து நிறுத்தப்பட்டார்? என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் சகோதரர் இளையராஜா போலவே ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். பாஜக ஆதரவாளரான கங்கை அமரன் நேற்று இரவு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த சில நிர்வாகிகளுடன் சேர்ந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
24
கங்கை அமரனுக்கு அனுமதி மறுப்பு
கையில் வேல் வைத்திருந்த அவர் திருத்தணி கோயிலில் வேல் பூஜை செய்யப் போவதாக கூறினார். இதற்கு முறையான அனுமதி பெறாததால் கங்கை அமரனையும், அவருடன் வந்தவர்களையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் கங்கை அமரனுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கங்கை அமரன், ''நீங்கள் உள்ளே விடவில்லை என்றால் என்ன? என் உள்ளத்திலேயே முருகன் இருக்கிறான்'' என்றார்.
34
திரும்பி சென்ற கங்கை அமரன்
தொடர்ந்து 'விஜபி கேட் வழியே உள்ளே அனுமதிக்க முடியாது. வேல் பூஜை செய்ய அனுமதி இல்லை' என்று கோயில் நிர்வாகிகள் திட்டவட்டமாக கூறியதால் கங்கை அமரனும், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்களும் அங்கு இருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருத்தணி கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தின் முக்கியமான கோயில்களில் விஐபிகள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் முன் அனுமதி பெறாமல் பூஜை செய்யக் கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் கங்கை அமரனை திருப்பி அனுப்பிய திருத்தணி கோயில் நிர்வாகிகளுக்கு இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'கோயில்களில் சாமி தரிசனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. பக்தர்களை தடுக்கும் உரிமையை கோயில் அதிகாரிகளுக்கு யார் கொடுத்தது?' என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.