Medical Insurance: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, சம்பளம், வீட்டுக் கடன், மருத்துவ காப்பீட்டு திட்டம், ஓய்வூதியம், பண்டிகை முன்பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு குஷியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு பல திட்டங்களை அறிவித்தாலும் அந்த திட்டங்கள் மக்களை சென்றடைய அரசு ஊழியர்களின் பணி முக்கியமானது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு, சம்பளம், நலன்கள், ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் வீட்டுக் கடன், மருத்துவ காப்பீட்டு திட்டம், ஓய்வூதியம், பண்டிகை முன்பணம், விபத்து காப்பீடு, திருமண உதவி போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
24
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்
இந்நிலையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழக அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2026 அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் ஜூலை 1 முதல் 2031ம் ஆண்டு ஜூன் 30 வரை 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா முறையில் ரூ.7.50 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம். 46 வகையான தீவிர நோய்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் வரை சிகிச்சை வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக கார்ப்பஸ் நிதி மூலம் ரூ.15 லட்சம் வரை உதவி கிடைப்பதால், மொத்தம் ரூ.27 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தில் 2,992 சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 1,535 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டோரும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறைந்த ஊதியம் பெறுவோருக்கான பிரீமியத்தை அரசே ஏற்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.