
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், டெல்லியில் தமிழ்நாடு அரசின் நலன் சார்ந்த பணிகளைக் கவனிக்க, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட நாராயணாவை (Venkat K. Narayana) சிறப்புப் பிரதிநிதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதாவது அவருக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் இது தொடர்பான அரசாணையை வெளியிட்டார். இந்த நியமனம், வெங்கட நாராயணா பொறுப்பேற்கும் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த வெங்கட நாராயணா?
டெல்லியில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதே இப்பதவியின் முதன்மை நோக்கமாகும். கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணா பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் புகழ்பெற்ற 'கே.வி.என் புரோடக்ஷன்ஸ்' (KVN Productions) நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி சென்சார் பிரச்சனை காரணமாக இன்னும் திரைக்கு வராத 'ஜனநாயகன்' திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம், அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் இவர் பெரிதும் கவனிக்கப்படும் நபராக மாறினார் வெங்கட நாராயணா.
தவெக ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய் தலைமையிலான குழுவில் வெங்கட நாராயணா முக்கியப் பங்கு வகித்தார். முதலமைச்சரின் நம்பிக்கைக்குரிய வட்டாரத்தில் ஒருவராகக் கருதப்படும் இவர், தற்போது இந்த அரசுப் பதவியின் மூலம் டெல்லியில் தமிழகத்தின் குரலாகச் செயல்பட உள்ளார். தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரியது முதல், டெல்லி அதிகார மட்டம் வரையிலான மிக முக்கிய அரசியல் நகர்வுகளில் விஜய்யின் நம்பிக்கைக்குரிய 'நிழல்' மனிதராக வெங்கட நாராயணா செயல்பட்டு வந்துள்ளார்.
இதுதான் காரணமா?
கர்நாடகாவில் மிகப்பெரிய தொழில் பின்னணி கொண்ட இவர், டெல்லி அரசியல் வட்டாரங்களிலும், மத்திய அமைச்சகங்களிலும் உள்ள முக்கியப் புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்று கூறப்படுகிறது. டெல்லியில் தமிழக அரசின் உரிமைகளை நிலைநாட்டவும், மத்திய அரசுடனான இணக்கமான உறவை வளர்க்கவும் வெங்கட நாராயணாவின் இந்த 'டெல்லி கனெக்ஷன்' மற்றும் அவரது ராஜதந்திர அணுகுமுறை விஜய்க்குப் பெரிதும் உதவும் என்ற கணக்கிலேயே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
டெல்லிக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக விளங்கும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பொறுப்பு வெங்கட நாராயணாவுக்கு வழங்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெங்கட நாராயணாவின் பூர்வீகம் மற்றும் அவரது கே.வி.என் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூரு ஆகும். தமிழக அரசின் சார்பாக டெல்லியில் பிரதிநிதித்துவம் செய்ய தமிழ்நாட்டைச் சேர்ந்த, மாநிலத்தின் அரசியல் மற்றும் நிர்வாகச் சூழலை நன்கு அறிந்த ஒருவரை நியமித்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆளே இல்லையா?
தமிழ்நாட்டிற்குள் தகுதியான நபர்கள் இல்லையா? கர்நாடகாவை சேர்ந்தவரை ஏன் இந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும்? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பது வெறும் பெயரளவு பதவி அல்ல. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பல்வேறு அமைச்சகங்களில் உள்ள தமிழகம் சார்ந்த கோப்புகளை நகர்த்துவது போன்றவற்றுக்கு அரசியல் முதிர்ச்சியும், டெல்லி அதிகாரத்துவத்தைக் (Bureaucracy) கையாண்ட அனுபவமும் தேவை. வெங்கட நாராயணா கல்வி ரீதியாகப் பல தகுதிகள் (CA, CS, LLB) பெற்றிருந்தாலும், அரசு நிர்வாகத்திலோ அல்லது அரசியல் ராஜதந்திரத்திலோ அவருக்கு நேரடி அனுபவம் இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
மிக முக்கியமாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே இப்போது மேகதாது பிரச்சனை நிலவி வருகிறது. கர்நாடகா மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதில் கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவின் நிலைப்பாடு என்ன? என்பதே எதிர்க்கட்சிகள், அரசியல் நிபுணர்களின் கேள்வியாக உள்ளது.