டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கிடைக்கிறது
ஒவ்வொரு ஆண்டும் கல்வியை முடித்து பல லட்சம் இளைஞர்கள் வேலை தேடி வருகிறார்கள். அந்த வகையில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு இருந்தாலும் அரசு பணியை குறியாக வைத்து இரவு பகலாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வருகிறார்கள்.
வசதி படைத்தவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பணம் கட்டி பயிற்சி செல்கின்றனர். ஆனால் ஏழை, எளிய மாணவர்களால் பணம் கட்ட முடியாத காரணத்தால் வீட்டிலேயே படித்து வருகிறார்கள். அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
25
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - ஜூலை 12ஆம் தேதி தேர்வு
இந்த நிலையில் குரூப் 4 தேர்வான கிராம நிர்வாக அலுவலர் (V.A.O.), இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர், ஸ்டெனோகிராபர், பில் கலெக்டர், கள ஆய்வாளர், வரைவாளர் போன்ற பணிகளுக்காக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் வெற்றி பெறும் வகையில் இலவச பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
35
டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி
சென்னை மாவட்டம், கிண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 12-05-2025 முதல் நடைபெற்று வருகிறது.
டிஎன்பிஎஸ்சி - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி
இப்பயிற்சி வகுப்பானது வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடத்தப்படும். இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப்படிவ நகலுடன் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை -32, கிண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
55
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு அழைப்பு
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார். இதே போல மற்ற மாணவர்களுக்கும் இலவச பயிற்சி முகாமானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.