Tiruvannamalai: நினைத்தாலே முக்தி தரக்கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது. அது மட்டுமல்லாமல் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம்.
உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக்கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது. அது மட்டுமல்லாமல் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி தினத்தன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர்.
24
பவுர்ணமி கிரிவலம் வரும் பக்தர்கள்
ஆனால் தற்போது பவுர்ணமி நாட்களில் மட்டுமல்ல பிரதோஷம், வார விடுமுறை உள்ளிட்ட அனைத்து நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர் மோர் வழங்கப்படுகிறது.
34
5 இலவச குளிர்சாதனப் பேருந்து
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 5 இலவச குளிர்சாதனப் பேருந்து (Fee AC Bus Service) சேவை தொடங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோக்கள் மூலம் வருகை தருகின்றனர். ஆனால் ஆட்டோக்கள் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதற்கு முடிவு கட்டும் வகையில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் ஏசி பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மத்திய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து அண்ணாமலையார் கோவில் வரை இந்த பேருந்து சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மூத்த குடிமக்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் கிரிவலம் செல்வதற்கு 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுழற்சி முறையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் நடந்து கிரிவலம் செல்ல முடியாதவர்கள் ஆட்டோவில் சென்றால் ரூ.1000 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.