அதிமுக ஒருங்கிணையனும்
வாக்குகள் சிதறுவதால் எளிதாக கிடைக்கக்கூடிய வெற்றிகள் கூட கை நழுவி செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. நேற்று எடப்பாடி பழனிசாமியை மாஜி அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். தற்போதைய நிலையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளனர்.
எடப்பாடியை சந்தித்த மாஜிக்கள்
ஆனால் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான திட்டங்களை வகுத்துள்ளதாக கூறியுள்ளார். அப்போது நாடாளுமன்ற தோல்வி தொடர்பாக ஆலோசித்தவர்கள் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தது ஏன் என செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜெயலலிதா இருக்கும் போது பிரிந்து சென்ற பல மூத்த நிர்வாகிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
sasikala and c.v.shanmugam
மறுப்பு தெரிவித்த எடப்பாடி
எனவே தற்போதைய நிலையில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் கடைசிவரை இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். எனவே மீண்டும் சந்தித்து தங்களது கோரிக்கை வலியுறுத்துவார்கள் என கூறப்படுகின்றது.
பிரிந்தவர்கள் ஒன்று சேர்வோம்
தொடர் தோல்விகள் கட்சிக்கு நல்லதல்ல… பிரிந்து இருப்பதால்தான் இந்தநிலை… இனியும் இது தொடர்ந்தால் கட்சிக்காரர்கள் வேலை செய்ய மாட்டார்கள்… இந்தத் தேர்தலிலேயே கிளைக்கழகச் செயலாளர்களே வேலை பார்க்கவில்லை… பிரிந்தவர்கள் ஒன்று சேர்வோம்… இனியும் தாமதிக்கக் கூடாது… இதுதான் ஆறு பேர் முன்வைத்த வாதங்கள். எடப்பாடி கடைசிவரை உறுதியாக இருந்து அதெல்லாம் சரிப்பட்டு வராது என்றே சொல்லியிருக்கிறார். ஆறு பேரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க… வாதங்கள் தடித்து… முடிவு எட்டப்படாமலேயே வெளியேறியிருக்கிறார்கள் ஆறு பேரும்.
எண்ணிக்கை அதிகரிக்கலாம்
அடுத்த வாரம் மீண்டும் எடப்பாடியை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்த இருக்கிறது ஆறு பேர் குழு. அப்போது குழுவினர் எண்ணிக்கை அதிகமாகலாம்! நாரதர் கலகம் மட்டுமல்ல… ஆறு பேர் கலகமும் நன்மையில் முடியும்… முடிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதிமுகவினர். பிரிந்தவர்கள் கூடுவது காலத்தின் கட்டாயம்! என பத்திரிக்கையாளர் லஷ்மண் கூறியுள்ளார்.