அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய போது, அவர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சத்யா பன்னீர்செல்வம் கடந்த 2016-2021 வரை பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் வீட்டில் சொத்து குவிப்பு புகாரை அடுத்து அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் நகரில் வசித்து வருபவர் சத்யா பன்னீர்செல்வம். இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை அதிமுக எம்எல்ஏவாக இருந்து வந்தார். இவரது கணவர் பன்னீர்செல்வம் முன்னாள் நகர்மன்ற தலைவர். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சத்யா பன்னீர்செல்வம் அதிமுக சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த சத்யா பன்னீர்செல்வமும் அவரது கணவர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
24
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம்
பின்னர் அதிமுகவில் தங்களை இணைத்து கொள்ளுமாறு தலைமை அலுவலகத்துக்கு மனு அளித்து மீண்டும் அக்கட்சியில் இணைந்தனர். இதனையடுத்த சத்யா பன்னீர்செல்வத்திற்கு அதிமுக மகளிர் அணி துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுக்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ம் தேதி பண்ருட்டிக்கு வருகை தந்த போது சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
34
லஞ்ச ஒழிப்பு போலீசார்
இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரை அடுத்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை முதல் பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையை அடுத்து அவரது வீடு முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பண்ருட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியா பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் திடீரென அவர் மயக்கம் அடைந்தததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டில் இருந்து கார் மூலம் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.