Edappadi Palanisamy: எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு, அவர் தனது முகத்தை கைக்குட்டையால் மூடியபடி காரில் புறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருந்தார். துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நேற்று இரவு பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, சிவி சண்முகம், தம்பிதுரை, கே.பி. முனுசாமி நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை, தனபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்றனர்.
24
அமித்ஷா
இந்நிலையில் மூத்த நிர்வாகிகள் அமித்ஷா இல்லத்தில் அரை மணி நேரம் இருந்த நிலையில் அவர்கள் கிளம்பி சென்றுவிட்டனர். பின்னர் சுமார் 25 நிமிடம் எடப்பாடி பழனிசாமியுடன் மட்டும் அமித்ஷா தனியாக பேசினார். இனோவா காரில் அமித்ஷா வீட்டுக்குள் சென்ற எடப்பாடி பழனிசாமி பேசி முடித்துவிட்டு திரும்பும் போது பென்ட்லி காரில் அவர் மட்டும் சென்றுள்ளார். வழக்கமாக முன் இருக்கையில் அமரும் எடப்பாடி பழனிசாமி இப்போது பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு முகத்தில் கைக்குட்டையை கொண்டு மூடியவாறு புறப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது. இதற்கு திமுக, டிடிவி.தினகரன் உள்ளிட்ட பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
34
டிடிவி. தினகரன்
இந்நிலையில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக பேசியதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவருடன் மற்றொருவரும் இருந்ததாக அதிர்ச்சி தகவலை டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திவிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தேர்தல் வெற்றியை விட தன்மானமே முக்கியம் என வீரவசனம் எல்லாம் பேசிவிட்டு தற்போது அமித்ஷாவை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களை இனிமேலும் எடப்பாடி பழனிசாமியால் ஏமாற்ற முடியாது.
உள்துறை அமைச்சரை சந்தித்து வெளியே வரும்போது முகத்தை மூடி வர வேண்டிய அவசியம் என்ன? என்ன காரணத்துக்காக அப்படி முகத்தை மூடி வந்தார் என்பதை பழனிசாமி தான் சொல்ல வேண்டும். அண்ணன் பழனிசாமியை இன்று முதல் முகமூடியார் பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும். முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா என்ற கோரிக்கையில் தவறில்லை. தென்மாவட்ட மக்களை சரி செய்ய வேண்டும் என முயற்சி செய்கிறார் இபிஎஸ். இபிஎஸ் நினைப்பதுபோல் தென் மாவட்ட மக்கள் முட்டாள்கள் இல்லை. காரில் இபிஎஸ் பக்கத்தில் இருந்தது அவரது அன்பு மகன் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.