Lottery martin
மார்ட்டின் வீட்டில் சோதனை
சட்டவிரோத பணப்பரிமாற்றம், வருமானத்திற்கு அதிகமாக பணம் சேர்த்தது தொடர்பாக அவ்வப்போது அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருவார்கள். அந்த வகையில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனன் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறது. கோவை துடியலூரில் பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று காலை மத்திய பாதுகாப்பு படையினரின் துணையோடு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
Aadhav Arjuna
ஆதவ் அர்ஜூன் வீட்டில் சோதனை
இதே போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. சென்னை தேனாம்பேட்டை உள்ள கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.
ed raid
அமலாக்கத்துறை சோதனை- காரணம் என்ன.?
கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் லாட்டரி டிக்கெட் விற்பனையில் மோசடி நடைபெற்றதாக புகார் வந்ததையடுத்து அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இதில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மனைவி வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லையென கூறி வழக்கு விசாரணையை நீதிமன்றம் முடித்து வைத்தது.
lottery
சுற்றி வளைத்த அமலாக்கத்துறை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது அப்போது மார்ட்டின் மற்றும் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதற்கும், மீண்டும் விசாரணை நடத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தொடர உத்தரவிட்டனர். இந்தநிலையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.