2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கு விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்கிறார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் இரவு 9.30 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடையும் பிரதமர் திருச்சியில் ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் வழிபாடு மேற்கொள்கிறார்.
24
நள்ளிரவில் பிரதமரை சந்திக்கும் EPS
இதனிடையே தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சியில் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரவு 10.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் உடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
34
கூட்டணி கட்சிகள் குறித்து பேச வாய்ப்பு
2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தனர். இதே கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கும் என அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எங்கள் கூட்டணியில் தான் தொடர்கிறார்கள் என்று தெரிவித்து வந்தனர். ஆனால் அதிமுக தலைவர்களோ, அதிமுகவும், பாஜகவும் தான் கூட்டணி. எங்கள் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியை இன்று இரவு 10.30 மணியளவில் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக கூட்டணியில் இருவரும் இருக்கிறார்களா? இல்லையா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்கு நேரம் கேட்டதாகவும், ஆனால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.