திமுகவில் செயல்படாத மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படும் நிலையில், கல்யாணசுந்தரம் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாக்கோட்டை அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் திமுகவில் செயல்படாத மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட சேஷம்பாடி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லத்திற்கான பணிகள் தொடங்குவதற்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மாநிலங்களவை எம்.பி. கல்யாணசுந்தரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெரியவர் ஒருவர் கும்பகோணத்தில் முறையான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதியில்லை என சண்டை போட்டார். அதற்கு எல்லா பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைத்துவிடாது. திருமணம் ஆனால் கூட 10 மாதங்களுக்கு பிறகு தான் குழந்தை பிறக்கும், திருமணம் நடக்கின்ற அன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அது வேறு விதமாகத்தான் பிறக்கும், முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால் மட்டும் தான் திருமணம் அன்றே குழந்தையும் பிறக்கும் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.
24
தஞ்சாவூர் மாவட்ட செயலாளர்
ஒரு முறை மேடையில் பேசிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்குஜம் கல்யாண சுந்தரத்தை கும்பகோணம் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறிவிட்டார். அதனால் கடுப்பான அவர் கும்பகோணத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரா எதுவும் தெரியாமல் நீ என்ன ஐஏஎஸ் என மேடையிலேயே ஒருமையில் திட்டினார். மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த மாவட்ட அமைச்சர் செழியனை மதிப்பதில்லை.
34
கல்யாணசுந்தரம் மகன்
அதேபோல மாவட்ட அரசு ஒப்பந்தங்களாக இருந்தாலும் சரி, மணல் குவாரிகள் நடத்துவதாக இருந்தாலும் சரி கல்யாண சுந்தரத்தின் தலையீடு இல்லாமல் எதுவும் நடக்காதாம். இது ஒரு புறம் இருக்க கல்யாண சுந்தரத்தின் மகன் முத்து செல்வம் ஹோலி ட்ராப் பேக்கேஜ் என்ற குடிநீர் நிறுவனத்தை தஞ்சாவூர் மாவட்டம் பம்பைபடையூரில் நடத்தி வருகிறார். இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன கல்யாண சுந்தரம் கடந்த வாரம் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றிருக்கிறார்.
தனக்கு வயதாகிவிட்டதால் மாவட்ட செயலாளராக தன்னால் சரிவர பணியாற்ற முடியவில்லை. அதனால் தனது மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. கேட்டது கிடைக்கும் என நினைத்த கல்யாண சுந்தரத்திற்கு கட்சி தலைமை எதிர்பார்க்காத அதிர்ச்சியை கொடுத்தது. தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.பி கல்யாண சுந்தரத்தை விடுவித்து அவருக்கு பதிலாக மூன்று முறை எம்எல்ஏவாக இருக்கக்கூடிய கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனுக்கு பதவியை கொடுத்துள்ளது.