
பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 26) மற்றும் நாளை மறுநாள் (ஜுலை 27) இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். அதாவது நாளை தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து ரூ.4,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதன்பிறகு பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து திருச்சி புறப்பட்டு சென்று அங்கு இரவில் தங்குகிறார்.
தொடர்ந்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் திருவாதிரை பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். இந்நிலையில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது தமிழகத்திற்கு பெருமை என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தமிழகம் வருவது பெருமை
''ராஜேந்திர சோழன் உருவாக்கிய தலைநகர் தான் கங்கை கொண்ட சோழபுரம். அவரின் கடல் கடந்த படையெடுப்பின் ஆயிரமாவது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கு பிரதமர் மோடி வருவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்'' என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். திமுகவின் மூத்த அமைச்சர் பிரதமர் மோடி வருவது பெருமை என கூறியிருப்பது அரசியல் களத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மத்தியில் ஆளும் பாஜகவும், தமிழ்நாட்டில் ஆளும் திமுகவும் பாம்பும், கீரியுமாக உள்ளன.
நீட் தேர்வு, தமிழகத்துக்கு கல்வி நிதி தர மறுப்பது என மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு பல்வேறு அநீதிகளை செய்து வருவதாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. திமுக பொதுக்குழு கூட்டம், இளைஞரணி கூட்டம் என அனைத்து கூட்டங்களிலும் பாஜக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும் கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தது, வக்பு வாரிய சட்டத் திருத்தம் கொண்டு வந்தது, சிறுபான்மையினர்களுக்கு எதிராக செயல்படுவது என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் பாஜகவுக்கு எதிராக வசைபாடி வருகின்றனர்.
'கோ பேக் மோடி'
இது மட்டுமின்றி பிரதமர் மோடி தமிழகம் வரும்பொதெல்லாம் முன்பு எதிர்க்கட்சியாக இருந்த திமுக அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டு 'கோ பேக் மோடி' என சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகும் திமுக அரசு பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டவில்லை என்றாலும், கூட்டணி கட்சிகளை வைத்து கருப்பு கொடி காட்ட அனுமதி அளித்தது. கடந்த முறை பிரதமர் மோடி ராமேஸ்வரம் பாம்பனில் புதிய பாலத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
இப்படியாக பாஜகவை திமுக தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், திடீரென அமைச்சர் தங்கம் பிரதமர் மோடியை புழந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணியை தொடர்ந்து விமர்சித்து வரும் திமுக, இப்போது பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருவது பெருமை என கூறியிருப்பதன் மூலம் பாஜகவிடம் சரண்டராகி விட்டதா? என்ற கேள்வியை அரசியல் நிபுண்ர்கள் எழுப்பியுள்ளனர்.