
அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறை வழக்கு, மணல் கடத்தல் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்துக் கொண்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டு வருவதாக வெளியாகி உள்ள தகவல்களால் ஆளுங்கட்சி மேலிடம், அமைச்சர்கள் மட்டுமின்றி ஐஏஎஸ் அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பீதியில் உள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்ததைப் போல இந்த முறையும் தலைமைச் செயலகத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தவே சென்னையில் குவிக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பதவி நியமனத்தில் ரூ.888 கோடி லஞ்சப் பணம் வாங்கியது, இதே துறையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் விடப்பட்ட பல்வேறு பணிகளுக்கான டெண்டரில் 7.5% முதல் 10 சதவீதம் வரை அமைச்சர் ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சரின் உதவியாளர்கள், அமைச்சரின் சகோதரர், குடும்பத்தார் பெற்ற ரூ.1020 கோடிக்கான முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை சோதனைகளில் கிடைத்தது.
இந்த ஆவணங்கள் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி 258 பக்க ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை, தமிழக டிஜிபி வெங்கட்ராமனுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு கடிதம் அனுப்பி இருந்தது. ஆனால், ஆளும் கட்சி அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய எந்த அதிகாரிக்குத் தான் துணிச்சல் இருக்கும்? எனவே வழக்கம்போல இந்த இரண்டு கடிதங்களையும் டிஜிபி அலுவலகத்தில் கிடப்பில் போட்டு வைக்கும்படி மேலிடம் போட்ட உத்தரவால் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், அதிமுக சார்பில் அமலாக்கத்துறை அனுப்பிய புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர், எம்.பி., இன்பத்துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அவசரமாக தமிழக அரசு இந்த மனுவை டிஜிபியிடம் இருந்து பெற்று, லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணை நடத்தும்படி பெயருக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்ததும், மனு மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி எழும் என்பதால் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. ஆளுங்கட்சி அமைச்சர் மீதான வழக்கு விசாரணை எந்த அளவிற்கு நேர்மையாகவும், விரைவாகவும் லஞ்ச ஒழிப்பு துறையால் எடுத்துக் கொள்ளப்படும் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று. முதற்கட்ட விசாரணை நடத்துவதாக கூறி சில மாதங்களை கடத்தினால் மார்ச் மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியாகும். தேர்தலுக்குப் பிறகு இந்த விசாரணையை எப்படி மேற்கொள்வது என தேர்தல் முடிவை பொருத்து முடிவு எடுத்துக் கொள்வோம்.
ஏனென்றால் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த அடுத்த நிமிடமே அமலாக்கத்துறை வழக்கை எடுத்து சோதனை, விசாரணை, கைது என அடுத்தடுத்து நடவடிக்கைகளில் ஈடுபடும். இதனால், ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த கண்துடைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த வழக்கே திமுகவிற்கு, மத்திய பாஜக வைத்துள்ள மிகப்பெரிய செக். இந்த வழக்கில் அனைத்து ஆவணங்களும் ஏற்கனவே அமலாக்கத்துறை கைவசம் உள்ளதால் சோதனை நடத்திவிட்டு அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கைது, அமைச்சர் குடும்பத்தினர், உதவியாளர்கள் கைது, மற்றும் லஞ்சம் கொடுத்த காண்ட்ராக்டர் கைது என தொடர் கைது சம்பவங்களில் அமலாக்கத்துறை மாஸ் காட்ட தொடங்கிவிடும்.
இதன் மூலம் ஆளும் கட்சி மிகப்பெரிய சிக்கலுக்கும், அவப்பெயருக்கும் உண்டாகும் என மத்திய பாஜக தலைவர்கள் திட்டம் போட்டுள்ளனர். இந்த நிலையில் தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே டெல்லியில் இருந்து அமலாக்குத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையில் இருந்து உயர் அதிகாரிகள் கொண்ட பெரிய அளவிலான அதிகாரிகள் சென்னைக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களில் ஒரு பிரிவினர் அமைச்சர் வீடு, உறவினர்கள் வீடுகள், டெண்டர் உள்ளிட்ட பல்வேறு அரசு விஷயங்களிலும் பணத்தை வாங்கி பல்வேறு இடங்களில் குவித்து வைத்துள்ள ஆளுங்கட்சி மேலிடத்தின் குடும்ப உறுப்பினர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மற்றொரு குழு மத்திய போலீசார் உதவியுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் அறைகளில் அதிரடி சோதனை நடத்த போவதாகவும் மிக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அதிகாரிகள் மூலம் தமிழகத்தில் உள்ள சில உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது ஒட்டுமொத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த ஊழலில் வெளிப்படையாக தெரிந்த ஒன்று ,அமைச்சர்களை விட இந்த அதிகாரிகள் சொல்வதை தான் முதல்வர் கேட்டு நடப்பதாகவும் ஏற்கனவே புகார்கள் எழுந்து வருகிறடு. எனவே இந்த மோசடிகளும், இவர்கள் துணை இல்லாமல் நடந்திருக்காது. எனவே இந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் இந்த லஞ்சம் மற்றும் கமிஷன் விவகாரத்தில் சிக்குவது உறுதி. உயர் நீதிமன்றம் இந்த வாரத்தில் வழக்கு தொடர்பாக விசாரணையை தொடங்கி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதும் இந்த அதிரடி சோதனையும் தொடங்கும்.
இந்த சோதனையோடு டாஸ்மாக், மணல் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளிலும் உச்சநீதிமன்றத்தின் உள் தடை உத்தரவை நீக்கி, தொடர்ச்சியாக சோதனைகளையும், கைது நடவடிக்கைகளும் மூன்று மாதங்களுக்கு பஞ்சம் இருக்காது என்கின்றனர் மத்திய உளவுத்துறை உயரதிகாரிகள். எனவே வரும் மூன்று மாதங்களும் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் உறங்க இரவுகள் தான் என்கிறார்கள் தலைமை செயலக அதிகாரிகள் வட்டாரத்தினர்.