முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், அவரை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல்வரின் வீட்டிற்கே நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். ஒருவார கால சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார்.
23
பணிக்கு திரும்பும் முதல்வர்
ஓய்வை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திற்கு செல்வதாகவும், வழக்கமானப் பணிகளைத் தொடர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் தனது சகோதரர் சுதீஷ், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
33
நேரில் நலம் விசாரித்த பிரேமலதா விஜயகாந்த்
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் தங்கள் கூட்டணிகளை பலப்படுத்துவதில் தீவிரம் செலுத்தி வருகின்றன. தேமுதிக தற்போது வரை எந்த கூட்டணியிலும் இடம்பெறாமல் உள்ள நிலையில், பிரேமலதாவின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் முதல்வர் வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது.