கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை பார்த்து ஆதவ் அர்ஜுனா இப்படி சொல்லிட்டாரே! பரபரக்கும் அரசியல் களம்!

First Published | Dec 4, 2024, 9:09 PM IST

ஃபெஞ்சல் புயல் மீட்புப் பணிகளில் திமுக அரசு முழுமையாகச் செயல்படவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Aadhav Arjuna

சமீப காலமாக திமுக அரசை அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் மீட்பு நடவடிக்கைகளில் திமுக அரசு முழுமையாக செயல்படவே இல்லை ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். 

Cyclone Fengal

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தால் வட மாவட்டங்கள் பேரழிவைச் சந்தித்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாடு தொடர்ந்து இயற்கை சீற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால், அதை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை மேற்கொள்ளாதது வருத்தத்திற்குரியது. அதேநேரம், மோசமான இயற்கை பாதிப்புகளை எதிர்கொள்ளும் ஒடிசா மாநிலம் முறையான கட்டமைப்பு வசதிகளையும் மக்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறை திட்டங்களையும் ஏற்படுத்தியது.


Cyclone Fengal flood

அதனால், அங்கு மக்கள் பெரியளவில் இயற்கை பாதிப்புக்கு உள்ளாவதில்லை. ஆனால், தமிழ்நாட்டிலோ ஒவ்வொரு முறையும் இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கபடுவதும் அதற்கு அரசு காரணங்களை மட்டும் சொல்வதுமே வாடிக்கையாக உள்ளது. இதற்கு மனித உயிர்கள் பலியாகியிருப்பதோடு உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைக்கே மக்கள் கை ஏந்தும் நிலைமை பெருந்துயர். நாம் இந்த பிரச்சனைகளிலிருந்து என்ன பாடம் கற்றோம் என்ற கேள்வியே எஞ்சுகிறது?

Aadhav Arjuna News

இப்பேரிடரால் பலியானவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் சார்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும், இப்பகுதியின் எளிய மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களை மொத்தமாகச் சிதைத்திருக்கிறது இந்தப் புயல். பலரும் அடிப்படை உணவுக்குக் கூட போராடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு போர்க்கால அடிப்படையில் தமது பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

VCK Aadhav Arjuna

பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை விரைந்து அறிய அரசு துரித தகவல் மையங்களை (Call Center) உருவாக்குவது அவசியம். சாலைகள் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டிருப்பதால் தன்னார்வலர்களால் கூட உதவிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் உள்ளது. எனவே அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி மையங்களை உருவாக்கி அதன் மூலம் தன்னார்வலர்கள் உட்பட அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். எளிய கடைநிலை மக்கள் வரை மீட்பு பணிகள் சென்று சேர வேண்டிய நிலையில் அரசு இந்த துரித தகவல் மையங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்கள் மற்றும் தேவைகளை திரட்டுவது அவசியம். அதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை பெற்றுதரும் வாய்ப்பு உருவாகும். எங்களைப் போன்ற தன்னார்வலர்கள் இந்த பெரும் துயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம். அரசு அதை பயன்படுத்திக் கொள்வது அம்மக்களின் தேவைக்கான அறமான செயல். 

mk stalin

ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு எப்படி இருபது பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்.பி. என்று பொறுப்பாளர்களை நியமித்து பம்பரம் போல் களப்பணியை மேற்கொண்டு தேர்தல் வெற்றிக்காக அவர்கள் காட்டும் ஆர்வத்தை இப்போது பெரும் துயரில் மக்கள் சிக்கியுள்ள வேளையில்,இடைத்தேர்தல் பாணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் ஏன்  செயல்படவில்லை?. முழு அமைச்சரவையும் இந்த பணியில் பங்கெடுப்பதே அவசியம். குறிப்பாக மைக்ரோ லெவலில் கிளை, ஊராட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்களை பொறுப்பாளர்களை நியமித்து அடிப்படைத் தேவைகளுக்காக கையேந்தி நிற்கும் ஏழை, எளிய மக்களின் துயரை  அரசு விரைந்து துடைத்திட வேண்டும்.

Tamilnadu Rains

முதன்மையாக விளிம்புநிலை மக்களுக்கு வெள்ள பாதிப்பால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருப்பதால் உடனடியாக மருத்துவக் குழுக்களை நியமித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவாரண நிதி கேட்பது நமது உரிமை. அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. தொடர்ந்து, ஒன்றிய அரசு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு தமிழ்நாட்டிற்கான நிவாரண நிதியை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. அதேநேரத்தில், சூழலைக் கருத்தில் கொண்டு இப்பெரும் துயரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தலித் மற்றும் ஏழை, எளிய விவசாய  மக்களுக்கு விரைந்து விடியலை வழங்க வேண்டும். 

Aadhav Arjuna

ஒன்றிய அரசு நம்மை வஞ்சிக்கிறது என்ற காரணத்திற்காகக் காலதாமதப்படுத்தி நம் மக்களை நாம் வஞ்சித்துவிடக் கூடாது. உணவு, உடை, இருப்பிடம் என நம் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை உறுதிப்படுத்த வேண்டியது நம் பொறுப்பு.  தமிழ்நாட்டிற்கே உரியத் தற்சார்பு பொருளாதாரம் மூலம் நிவாரணங்கள் போர்க்கால அடிப்படையில் வழங்க முடியும். கடந்த சில வருடங்களாகக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் மக்கள் உயிர் இழப்பையும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து எதிர்கால வாழ்வியல் சிக்கலை சந்திக்கிறார்கள். 

Aadhav Arjuna Vs DMK

இதை தடுக்க பேரிடர் நிபுணர்களையும்,  துறைசார் வல்லுநர்களையும் கொண்ட ஒரு குழுவை  அமைத்து இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையிலும்,மக்களின் வாழ்வியலுக்கு ஊறு விளைவிக்காத முறையில் ஒரு கொள்கை திட்டத்தை ஒடிசா போன்ற மாநிலங்களில் மேற்கொள்வது போல தமிழகத்திலும் மேற்கொள்வது அவசியம்.  இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதில் அரசு இனி விழிப்போடு திட்டங்களை வகுக்க  வேண்டும். தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என  ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!