லோக ஐய்யப்பா நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது என கேரளா முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
லோக ஐய்யப்பா சங்கமம் 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு இணைந்து நடத்தும் லோக ஐய்யப்பா சங்கமம் (Global Ayyappa Sangamam) நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சி செப்டம்பர் 20, 2025 அன்று பம்பை ஆற்றங்கரையில், சபரிமலை அய்யப்பன் கோயிலின் அடிவாரத்தில் நடைபெற உள்ளது. இது தேவஸ்வம் வாரியத்தின் 75-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாகும்.
கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் வி.என். வாசவன் கடந்த 22ம் தேதி சென்னையில் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, கேரள தேவஸ்வம் செயலாளர் எம்.ஜி. ராஜமாணிக்கம் மற்றும் திருவாங்கூர் தேவஸ்வம் வாரிய ஆணையர் பி. சுனில் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
25
நிகழ்ச்சியின் நோக்கம்
இந்த லோக ஐய்யப்பா சங்கமம், உலகெங்கிலுமிருந்து ஐய்யப்ப பக்தர்களை ஒரே மேடையில் ஒன்றிணைப்பதோடு, சபரிமலையை உலகளாவிய யாத்திரை மையமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘தத்வமசி’ என்ற செய்தியை பரப்புவதும், பக்தர்களின் நலனை மேம்படுத்துவதும், சபரிமலை மரபுகளைப் பாதுகாப்பதும் இதன் முக்கிய குறிக்கோள்களாகும்.
35
முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கும் நிலையில், கர்நாடகா, தெலங்கானா மாநில அமைச்சர்கள், கேரளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். உலகெங்கிலுமிருந்து சுமார் 3,000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், ஸ்டாலினின் பங்கேற்பு இந்து மதத்தையும், சபரிமலை பக்தர்களையும் அவமதிப்பதாகவும், இந்து மதத்திற்கு எதிராக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளை சுட்டிக்காட்டியும், கடுமையாக விமர்சித்திருந்தார். பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் இருவரும் இந்து பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையெனில் பாஜக இந்த நிகழ்ச்சியில் அவர்களது பங்கேற்பை எதிர்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
55
பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "முன்னரே முடிவான நிகழ்ச்சி காரணமாக, செப். 20ஆம் தேதி நடைபெறும் லோக அய்யப்ப சங்கமம் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத சூழல்; தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.