கோவை மக்களுக்கு அடுத்தடுத்து குட்நியூஸ்! 3500 பேருக்கு வேலை ரெடி! மாஸ் காட்டும் முதல்வர் ஸ்டாலின்!

First Published | Nov 5, 2024, 5:51 PM IST

முதல்வர் ஸ்டாலின் கோவையில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கி, விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார். இந்தப் பூங்கா 158 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 3500 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.

அரசின் நலத்திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்யும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கினார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக  கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்தார் 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை உணர்ந்து, விரைவான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த வணிகச் சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. இதன்மூலமாக பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழ்நாடு விருப்பத் தேர்வாக உருவாகியுள்ளது. 

Tap to resize

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் தமிழ்நாட்டில் தழைத்து வளர, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (ELCOSEZ) உருவாக்குதல், கிராமம் மற்றும் நகர மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை நிரப்புதல், தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்ப மின் ஆளுமையில் சிறந்த மாநிலமாக மாற்றுதல், தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இவ்வரசு செயல்படுகிறது.

கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்

கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடம், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இடம் அளிக்கக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பை (IBMS) கொண்டுள்ளது. இப்புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தின் இரண்டு அடித்தளங்களில்
வாகனங்கள் நிறுத்துமிடமும், தரை மற்றும் ஐந்து மேல் தளங்களில் தகவல் தொழில் நுட்ப அலுவலகத்திற்கான இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் 8 மின்தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், மழை நீர் சேகரிப்பு வசதிகள், 72 மணி நேரம் ஜெனரேட்டர் இயக்கத்திற்காக 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் சேகரிப்பு தொட்டி, ஆறு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்த்தொட்டி, 1.35 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 130 KLD கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர்  இக்கட்டடத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளை வழங்கினார். இதன்மூலம் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால்
கையகப்படுத்த அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களில், வாரியத் திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டதால் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் பேரூர் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை வழங்கப்பட்டு, அதற்கான விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

Latest Videos

click me!