கடந்த ஓரிரு தினங்களாக போக்கு காட்டி வந்த Fenjal புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ளது. புயல் காரணமாக சென்னை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் இயல்பு நிலை கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சர்வதேச விமான நிலையம், நகைக்கடைகள், திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன.
முதல்வர் ஆய்வு
மழை முன்னெச்சரிக்கையாக சென்னை எழிலகத்தில் தமிழக அரசு சார்பில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (Mk Stalin) இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி செங்கல்பட்டு, ராணிபேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் எந்த பகுதியிலும் மழைநீர் தேங்கவில்லை. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்பதால் கனமழை பெய்யக்கூடும். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.