ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது, மேலும் திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி மிகவும் வலிமையாக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ் இடையே பிளவு நீடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இந்தியா டுடே ஊடகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவில் திமுக கூட்டணி 45 விழுக்காடு வாக்குகுளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இதைவிட 12 விழுக்காடு குறைவான வாக்குகளைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 விழுக்காடு வித்தியாசம் என்றாலே வெற்றி உறுதி. 12 விழுக்காடு வித்தியாசம் என்பது மிகப்பெரிய வெற்றியாக இருக்கப் போகிறது.
23
அனைத்து துறைகளிலும் சாதிக்கும் தமிழகம்
கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தாலும் நாங்கள் எங்கள் உழைப்பை தாமதப்படுத்த மாட்டோம். இன்னும் வேகமாக உழைக்கத் தெடங்குவோம். தமிழகத்திற்கும், திமுக அரசுக்கும் குடைச்சல் கொடுப்பதில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. அதனையும் கடந்து திமுக அரசு அனைத்து துறைகளிலும் சாதனைப் படைத்து வருகிறது.
33
ஆட்சியில் பஙகு..?
இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டி சாதனைப் படைத்துள்ளோம். தலை சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தில் 33 கல்லூரிகள் உள்ளன. திமுக அரசின் வெற்றிப் பயணம் 2.0 ஆட்சியிலும் தொடரும். ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது. அது எங்களுக்கும் தெரியும், கூட்டணியில் உள்ளவர்களுக்கும் தெரியும். ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்குவதற்காக இப்படிப்பட்ட விவாதங்களை மேற்கொள்கின்றனர். அரசியலைக் கடந்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சகோதரராகப் பார்க்கிறேன். அவரும் அப்படி தான் என்னைப் பார்க்கிறார்.
2021ம் ஆண்டைக் காட்டிலும் வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் அவ்வளவு கடினமானதாக இருக்காது. திமுக கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.