சாதியைச் சொல்லி கோயிலுக்குள் நுழைவதைத் தடுத்தால்...: உயர் நீதிமன்றம் கண்டிப்பு

Published : Jul 17, 2025, 08:04 PM IST

புதுக்குடி ஐயனார் கோயிலில் பட்டியலின மக்கள் நுழைவதைத் தடுப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதிப் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

PREV
14
கோயிலில் சாதிப் பாகுபாடு

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கும் எவருக்கும் எதிராக வழக்குப் பதிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் சாதி ரீதியான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாகக் கூறியுள்ளார்.

24
தலித்துகளுக்கு அனுமதி இல்லையா?

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, புதுக்குடி கிராமத்தில் உள்ள ஐயனார் கோயிலில் பட்டியல் இனத்தவர்களால் நிறுவப்பட்ட சிலைகளை ஒரு பிரிவினர் இடித்துத் தள்ளிவிட்டதாகவும், கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய இரும்பு கதவுக்குப் பின்னால் இருந்துதான் சாமி தரிசனம் செய்ய பட்டியல் இனத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறி வெங்கடேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஜூலை 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேர்த் திருவிழாவில் பட்டியல் இனத்தவர்கள் பங்கேற்கவும், கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

34
உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் சாதி ரீதியான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், "புதுக்குடி ஐயனார் கோயிலில் பட்டியலின மக்கள் நுழைவதை யாரும் தடுக்கவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்" என அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

"கோயிலில் அனைத்துத் தரப்பு மக்களும் தரிசனம் செய்வதையும், விழாக்களில் பங்கேற்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்" எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

44
சட்டத்தை செயல்படுத்துவது அதிகாரிகளின் கடமை

பல தலைவர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆலய நுழைவுச் சட்டம் இயற்றப்பட்டது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை" என வலியுறுத்தினார். "சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை யாராவது தடுத்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" எனவும் காவல்துறைக்கு ஆணையிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, கோயில்களில் நிலவும் சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தின் முக்கிய நடவடிக்கையாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories