திமுக அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில். இதனை பொய்யாக்கும் வகையில் திமுக அரசு பல ஆன்மிக திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அமைச்சரவையில் அறநிலையத்துறையை சேகர்பாபுவிற்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து சேகர்பாபு தலைமையிலான அதிகாரிகள் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம், கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு, கடத்தப்பட்ட கோயில் சிலைகள் மீட்பு, பழனியில் முருகன் மாநாடு என திமுக அரசு ஆன்மிக அரசாகவே மாறிவிட்டது.
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்காகவே சிறப்பு திட்டங்களும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கு ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியது. இதற்காக நபர் ஒன்றுக்கு ரூ.650 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆன்மிக பணத்தில் பயணம் செய்ய விரும்புபவர்கள் www.tnstc.in என்ற இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனை விட ஒருபடி மேலே சென்ற திமுக அரசு சென்னை, மதுரை,திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள கோயில்களை திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டத்தை அறிமுகம் செய்ததது. இதன்படி ஆன்மிகப் பயணத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி (உணவு உள்பட) அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதே போல மற்ற பக்தர்கள் கட்டணம் செலுத்து பயணம் செய்யும் வகையில் சிறப்பு திட்டத்தையும் சுற்றுலாத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதன் படி இந்த பயணத்திட்டம் தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சென்னை ஆன்மிக சுற்றுலா-1
சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -1 ல் சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு பேருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெசன்ட் நகர் அருள்மிகு அஷ்டலெஷ்மி திருக்கோயில், திருவிடந்தை அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில்களிலும் சிறப்பு ஆராதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மதிய உணவு முடிவடைந்த பின்னர் மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், சிங்கபெருமாள்கோவில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில், திருநீர்மலை அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று மாலை நேரத்தில் வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. .
சென்னை ஆன்மிக சுற்றுலா-2
சென்னையில் இரண்டாவது பயண திட்டமான திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் சுற்றுலாவில், சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு சிறப்பு பேருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருநீர்மலை அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில், திருமழிசை அருள்மிகு ஜகன்னாத பெருமாள் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் அருள்மிகு வைத்திய வீர ராகவ பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் வழிபாடு முடிந்த பின்னர் மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆன்மிக சுற்றுலா
சென்னையை அடுத்து மதுரை மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவில் பல கோயில்களுக்கு பக்தர்களை அழைத்து செய்யப்படவுள்ளது. அந்த வகையில் மதுரை – அழகர்கோவில் சாலையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு மதுரை - 2 வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு பேருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, முதலில் அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், ஒத்தகடை அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் திருக்கோயில், திருமோகூர் அருள்மிகு காளமேக பெருமாள் திருக்கோயில், திருகோஷ்டியூர் அருள்மிகு சௌம்ய நாராயண பெருமாள் திருக்கோயில், மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று சிறப்பு தரிசனத்தை முடித்த பின்னர் மதுரை ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை மாலை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.
திருச்சி ஆன்மிக சுற்றுலா-1
இதே போல திருச்சி மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்களுக்கான ஒரு நாள் சுற்றுலாவிலும் ஆனமிக பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி திருச்சியில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு சிறப்பு பேருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து முதலில் உறையூர் அருள்மிகு அழகிய மணவாள பெருமாள் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதசுவாமி திருக்கோயில், உத்தமர் கோவில் அருள்மிகு புருஷோத்தம பெருமாள் திருக்கோயில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசல பெருமாள் திருக்கோயில், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கடராம பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று வழிபாடுகளை முடித்த பின்னர் மாலையில் திருச்சி ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் ஆன்மிக சுற்றுலா
தஞ்சாவூர் மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி தஞ்சாவூர் ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து முதலில் திருகண்டியூர் அருள்மிகு சாபவிமோச்சன பெருமாள் திருக்கோயில் சென்று சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து , கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில், திருநாகேஸ்வரம் அருள்மிகு உப்பிலியப்பன் பெருமாள் திருக்கோயில், நாச்சியார் கோவில் அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில்களில் வழிபாட்டிற்கு பிறகு திருச்சேறை அருள்மிகு சாரநாத பெருமாள் திருக்கோயில், மன்னார்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில், வடுவூர் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று இரவு நேரத்தில் ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை வந்தடையும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடங்கியது முன்பதிவு
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக நடத்தப்படும் ஆன்மிக பயனமான திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு விருப்பமுள்ள பக்தர்கள் சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக முன்பதிவு மையத்தில் நேரடியாக அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றுலாவிற்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 400 ரூபாய் வரை கட்டணம் நிர்யணிக்கப்பட்டுள்ளது.
மேலும் வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா கட்டணம், உணவு உள்ளிட்டவைகள் குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண்.180042531111 மற்றும் தொலைபேசி எண்கள் 044-25333333, 044-25333444 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.