எச் ராஜாவின் சர்ச்சை கருத்து
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இருப்பவர் எச். ராஜா, இவர் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அப்போது பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். மேலும் தி.மு.க துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியயதாக காவல்நிலையத்தில் வழக்குகள் பதியப்பட்டது.
H.raja
3 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவு
ஈரோடு நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பு கடந்த 3 மாதமாக நடைபெற்றுவந்தது.
அப்போது கனிமொழிக்கு எதிரான கருத்து அரசியல் ரீதியானது எனவும் பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக உரிய ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை என எச்.ராஜா தரப்பில் வாதிடப்பட்டது.
kanimozhi and h.raja
எச் ராஜா குற்றவாளி
அதே நேரத்தில் எச்.ராஜாவின் கருத்துக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று ஒத்திவைத்தார். இதனையடுத்து இன்று பெரியார் சிலை விவகாரம் மற்றும் கனிமொழிக்கு எதிரான கருத்து தொடர்பான வழக்கில் நீதிபதி ஜெயவேல் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது எச். ராஜா மீதான புகார்களை காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட இரண்டு பதிவுகளும் எச். ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் பதியப்பட்டது என உறுதியாகிறது என கூறினார்.
h.raja
ஓராண்டு சிறை- தண்டனை நிறுத்தம்
எனவே இந்த வழக்குகளில் எச். ராஜா குற்றவாளி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் தீர்ப்பு அளித்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளிலும் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பால் எச்,ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாக தவகல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் எச் ராஜாவிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.