அரசியல் களத்தில் விஜய்
திரைத்துறையில் கலக்கி வருபவர் நடிகர் விஜய், நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழகத்தின் நாளைய தீர்ப்பிற்காக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். ஒரு படத்திற்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் விஜய் அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டு அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலங்கு என அறிவித்த விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அடுத்ததாக கட்சி உறுப்பினர்களை இணைக்கும் பணியையும் வேகப்படுத்தினார். தற்போது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து பாடலையும் வெளியிட்டு திராவிட கட்சிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த நிலையில் அடுத்ததாக கட்சியின் மாநாட்டு பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக மாநாடு
செப்டம்பர் 23ஆம் தேதி மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் மாநாட்டிற்கான இடம் தேர்வு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டுக்கான காவல்நிலையத்திலும் அனுமதி கோரப்பட்டது. இடத்தை பார்வையிட்ட காவல்துறையினர் 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை அளித்தனர்.
அதில் மாநாடு நடைபெறும் நேரம், முக்கிய தலைவர்கள் யார்.? மேடையில் அமரும் நிர்வாகிகள் யார்.? நிகழ்ச்சி நிரல் என்ன.? உணவு மற்றும் தண்ணீர் வசதி என்ன என்பது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பாக நேற்றைய தினம் பதில் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் மாநாடு அனுமதி தொடர்பாக முடிவு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
TVK Thalapathy vijay
வாழ்த்து தெரிவிக்காத விஜய்
இதனிடையே நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக கொண்டு அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து, அரசியல் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து என இது போன்ற வாழ்த்துக்களை மட்டுமே தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து வருகிறார். இந்தநிலையில் நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி அரசு சார்ப்பில் விடுமுறையும் அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விஜய்யின் கோட் திரைப்படம் வெளியானது. ஆனால் விநாயகர் சதூர்த்தியையொட்டி விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
Political Leader Vijay
விஜய்க்கு எதிராக களம் இறங்கிய பாஜக
இதனை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜக இளைஞரனி நிர்வாகி வினோஜ் வெளியிட்டுள்ள பதிவில், புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து சொல்லுவார் என இரவு7 மணி வரை காத்திருந்தாக தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் எந்தவித வாழ்த்தும் சொல்லவில்லை.எனவே சிறுபான்மையினரை குஷிப்படுத்தும் அதே பழைய தந்திரம். திமுகவை காப்பியடிக்கும் அளவுக்கு விஜய் தாழ்ந்து போயிருக்கிறார். எனவே இப்போதே விழித்துக் கொள்ளுங்கள் மக்களே" என வினோஜ் குறிப்பிட்டுள்ளார். இதை போல மற்றொரு பாஜக நிர்வாகி எஸ்ஜி சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், பக்ரித், ஈஸ்டர், புனித வெள்ளிக்கு வாழ்த்து சொல்லும் விஜய் ஏன் விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையென கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்துக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்
இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மறுக்கும் கட்சிகளுக்கு இந்துக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? எனவும் ஆவேசமாக தெரிவித்தார். இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள ப்ளூ சட்டை மாறன், இதே விஜய்தான சாய்பாபாவுக்கு கோவில் கட்டுனாரு. சமீபத்துல சீரடிக்கும் போயிட்டு வந்தாரு. மாணவர்களுக்கு ஊக்கத்தொகை நிகழ்ச்சில இவருக்கு நெத்தில பொட்டு வச்சப்ப..அதையும் ஏத்துக்கிட்டாரு" என அடுத்தடுத்து பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது விஜய்க்கு எதிராக பாஜகவினர் சீறிவருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினும் விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத சம்பவத்தையும் பாஜகவினர் விமர்சித்து வந்தனர்.
TVK Vijay
ஸ்டாலின், விஜய்க்கு எதிராக பாஜக
ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லும் முதலமைச்சர் தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத்து ஏன் என குற்றம்சாட்டினர். பாஜக மூத்த தலைவர். எச்.ராஜா கூறுகையில், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் அடுத்த முதல்வராக வரக்கூடாது. வர விடமாட்டோம் என அனைவரும் உறுதி மொழி எடுக்க வேண்டும் என தெரிவித்தார். வீடுவீடாக சென்று விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் இன்னொரு முறை வந்து விடக்கூடாது என கூறவேண்டும், இது பேரியக்கமாக உருவாக வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
தற்போது ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக விஜய் மீது பாஜகவின் பார்வை திரும்பியுள்ளது. 2026ஆம் ஆண்டு தான் தனது முழு அரசியல் என தெரிவித்துள்ள விஜய்க்கு எதிராக ஆரம்பத்திலையே பாஜகவினர் களத்தில் இறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.