
திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டும் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள "முத்தமிழறிஞர் கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம்" கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் 408 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அதிநவீன பேருந்து நிலையம், தமிழகத்திலேயே முழுமையாக குளிரூட்டப்பட்ட முதல் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்ற சிறப்பைப் பெறுகிறது. இந்தப் பேருந்து முனையத்தில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
குளிரூட்டப்பட்ட தரைத்தளம்: பேருந்து நிலையத்தின் தரைத்தளம் முழுவதும் 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் பால் சீலிங் செய்யப்பட்டு, 704 டன் ஏசி வசதியுடன் குளிரூட்டப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பயணிகள் பயன்படுத்தும் தரைத்தளம் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்ட முதல் பேருந்து நிலையமாகும்.
பேருந்துகள் நிறுத்தும் வசதி: ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் வசதி இங்கு உள்ளது. தரைத்தளத்தில் வெளியூர் மற்றும் நீண்ட தூர பேருந்துகளுக்கான 345 இடங்களும், முதல் தளத்தில் நகரப் பேருந்துகளுக்கான 56 இடங்களும் உள்ளன.
உணவகங்கள் மற்றும் கடைகள்: பயணிகளுக்கான உணவகங்கள், டீ, காபி, சிற்றுண்டிக் கடைகள் மற்றும் பல்பொருள் விற்பனைப் பெட்டிக் கடைகள் என மொத்தம் 20 கடைகளும், 12 உணவகங்களும், 10 சிற்றுண்டிக் கடைகளும் திறக்கப்படவுள்ளன. (தற்போது சில கடைகள் செயல்பாட்டில் உள்ளன).
கழிப்பறைகள்: ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்தனி நவீன கழிப்பறைகள் உட்பட மொத்தம் 107 கழிப்பறைகள் உள்ளன. இதில் ஆண்களுக்கு 42, பெண்களுக்கு 59, திருநங்கைகளுக்கு 2, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கழிப்பறைகள் அடங்கும். மேலும், 4 குளியலறைகளும் உள்ளன. கழிப்பறைகளில் தானியங்கி முறையில் இயங்கும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிஃப்ட்கள்: பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்கள்) மற்றும் லிஃப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
குடிநீர் வசதி: காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
பொருள்கள் வைக்கும் அறை: பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைக்க லாக்கர் வசதி கொண்ட பொருள்கள் வைப்பறை உள்ளது.
மருத்துவ உதவி மையம்: தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவர், செவிலியர், உதவியாளர் கொண்ட குழு 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது. பயணிகளின் அவசரத் தேவைக்காக அழைப்பின்பேரில் மருத்துவர் குழுவினர் வருகின்றனர்.
ஏடிஎம் வசதிகள்: தற்போது ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படாததால், 3 வங்கிகளின் நடமாடும் ஏடிஎம் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பேட்டரி கார்கள்: முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பயன்பாட்டிற்காக 3 பேட்டரி கார்கள் தயார் நிலையில் உள்ளன.
தகவல் பலகைகள்: டிஜிட்டல் வழிகாட்டி பலகைகள் மற்றும் 50 எல்.இ.டி திரைகள் பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளன.
காவல்துறை: தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார ஏற்பாடுகள்: பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு சுகாதார வசதிகளை உறுசெய்ய 228 தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தனியார் பராமரிப்பு: பேருந்து நிலையத்தின் பராமரிப்புப் பணிகள் 15 ஆண்டுகளுக்கு தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தப் புதிய முனையம், சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான பேருந்து இணைப்பை மேம்படுத்துகிறது. நகரின் மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவை தொடர்ந்து செயல்படும் என்றும், நகரப் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம், திருச்சியை தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் ஒரு முன்னணி போக்குவரத்து மையமாக நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.