திராவிட கட்சிக்கு எதிராக தவெக
தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு எதிராக அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்தள்ளவர் நாடாளுமன்ற மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலையும் புறக்கணித்துள்ளார். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பிரம்மாண்டமான அளவில் முதல் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து விஜய்யின் அரசியல் சூடு பிடிக்கும் எதிர்பார்த்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
TVK Vijay
வெளியில் வராத விஜய்
அந்த வகையில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நேரடியாக சம்பவ இடத்திற்கு செல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை பனையூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து நிவராண உதவிகளை வழங்கியது கிண்டலுக்கு உள்ளானது. அடுத்ததாக தியாகிகள், மூத்த தலைவர்களின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாளுக்கு கூட சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சிலைகளுக்கு நேரடியாக சென்று மாலை அணிவிக்காமல் வீட்டில் ஒரு புகைப்படத்தை வைத்து அதற்கு மாலை அணிவித்து புகைப்படம் மட்டுமே வெளியிடப்பட்டது.
TVK Vijay
உட்கட்சி மோதல்
இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் தவெக நிர்வாகிகளுக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. நீ பெரியவனா.? நான் பெரியவனா என்ற போட்டி தொடங்கியுள்ளது. இதனால் பல மாவட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர். மேலும் தவெக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் தவெக தலைவர் விஜய்யை விட தன்னையே அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் இடத்திற்கு வர, பொதுச்செயலாளர் ஆசைப்படுவதாகவும் விமர்சித்து பேசியுள்ளார்.
வெளியான ஆடியோ
மற்ற கட்சிகளில் கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், உதயநிதி என தலைவர்களை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்பார்கள் ஆனால் இங்கு விஜய்யை விட ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதாக கூறியுள்ளார். 30 சதவிகித வாக்குகளை வாங்க நான் திட்டமிட்டு வரும் நிலையில் 2 சதவிகித வாக்குகள் கூட வாங்க முடியாத நிலைக்கு தவெக செல்லும் நிலை உருவாகியிருப்பதாக கூறியிருந்தார். இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் பரவிய நிலையில் இன்று ஆலோசனை குழு கூட்டம் நடைபெற அழைப்பு விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் இல்லாமல் ஆலோசனை கூட்டம்
இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால் பட சூட்டிங்கிற்கு விஜய் சென்று விட்டதால் கூட்டத்தில் பங்கேற்வில்லையென கூறப்படுகிறது. இதனால் தவெகவின் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட அணி தலைவர்கள கூட்டமானது அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் இன்று தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் கட்சியில் உட்கட்டமைப்பு பணியை மேற்கொள்வது, புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் 110 பேர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட இருப்பதாகவும்,அந்த வகையில் 2 அல்லது 3 தொகுதிக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.