தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அதில் தங்கள் தொகுதியில் உள்ள திட்டங்களின் நிலை, புதிய திட்டங்கள் தொடர்பான சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி தற்போது தோராய பட்டா வைத்துள்ள அனைவருக்கும் இ பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தோராய பட்டா.?
இதற்கு பதில் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தோராய பட்டா வைத்துள்ள அனைவருக்கும் இ பட்டா வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இதனையடுத்து கேள்வி நேரத்தில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, மும்பையில் உள்ள அடல் சேது பாலம் போல தனுஷ்கோடியில் இருந்து இலங்கை வரை பாலம் அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.
கடல் மேல் பாலம்
அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, இலங்கையில் நிலவிய உள்நாட்டு போர் காரணமாக அந்த திட்டம் இன்று வரை கனவுத் திட்டமாகவே இருக்கிறது என தெரிவித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை சுரங்கப் பாலம் அமைக்க இந்தியா சார்பில் முன்மொழியப்பட்டதாகவும், ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் கடம் மேல் பாலம்
கடந்த ஆண்டு அதே ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்த போதும் சாலை போக்குவரத்து பாலம் அமைக்க மத்திய அரசின் மூலம் முன்மொழியப்பட்டதாகவும், முதலமைச்சரின் அறிவுரை பெற்று மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் கடிதம் அனுப்பப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிச்சாண்டி, போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும், சென்னை பட்டினம்பாக்கத்திலிருந்து மகாபலிபுரம் வரையில் கடல் மேல் பாலம் அமைக்க அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசு நிதியா,? மாநில அரசு நிதியா.?
அதற்கு பதிலளித்த அமைச்சர் எ வ வேலு, முதற்கட்டமாக கலங்கரை விளக்கத்திலிருந்து நீலாங்கரை வரையில் கடல் மேல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும், அதனை மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி அல்லது தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் எ வ வேலு பதில் அளித்துள்ளார்.
இதே போல மின்தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சாரம் வழங்க வழிசெய்யும் வகையில், 399 துணை மின் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி நேரத்தில் தெரிவித்தார்.