தமிழகத்தில் அரசு நடத்தி வரும் ஆவின் பால் மட்டுமின்றி ஆரோக்கியா, திருமலா, ஸ்ரீனிவாசா, நந்தினி, அமுல் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தினமும் சுமார் 18 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டில் அடைத்து அரசு விற்பனை செய்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக கூற்படுகிறது. தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது தங்களின் விருப்பதற்கு ஏற்றவாறு பால் விலையை உயர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆவின் பாலுக்கு அடுத்தபடியாக விற்பனை செய்யப்படும் ஆரோக்யா பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆரோக்கிய நிறை கொழுப்பு பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.36ல் இருந்து ரூ.37ஆகவும், 1 லிட்டர் பால் பாக்கெட் ரூ.65ல் இருந்து ரூ.67 ஆகவும் உயர்த்தப்படுகிறது. அதேபோல நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.31ல் இருந்து ரூ.32 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.58ல் இருந்து ரூ.60 ஆகவும் உயர்த்தப்படுகிறது. அதேபோல 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30ல் இருந்து ரூ.32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37ல் இருந்து ரூ.38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66ல் இருந்து ரூ.68 ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாது ஆரோக்கியா பால் விநியோகம் செய்து வரும் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்த விலை ஏற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு பொதுமக்களை பாதிக்கும் என்பதால் தனியார் நிறுவனங்களின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.