Chennai Anna University
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு அண்ணாமலை புகார் அளித்திருந்தார்.
Annamalai
இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜய கிஷோர் ராஹத்கருக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில்: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23-ம் தேதி தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை மிரட்டி, சாலையோர உணவுக் கடை நடத்தும் ஞானசேகரன் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இவர் சைதாப்பேட்டை தொகுதி திமுக நிர்வாகி என்பதும் தெரியவந்துள்ளது.
national commission for women
திமுகவை சேர்ந்தவர்கள் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது இது முதல்முறையல்ல எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கையின் நகல் மூலம் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாள விவரங்களை, அவரது வீட்டு முகவரியுடன் போலீசார் வெளியிட்டுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் இத்தகைய செயலில் ஈடுபட்ட நபர்கள் மீதும், மாநில காவல் துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
dgp shankar jiwal
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரத்தை தேசிய பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tamilnadu
மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர்புடைய முந்தைய வழக்குகளில் காவல்துறை போதிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவது கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.