பறவை மோதியதால் பழுதடைந்த ஏர் இந்தியா விமானம் இலங்கையில் இருந்து சென்னை வந்து பத்திரமாக தரையிறங்கியது. அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு 164 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தில் பறவை மோதியது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த விமான நிலைய பொறியாளர்கள் விமானத்தில் சிக்கியிருந்த பறவையின் உடலை வெளியே எடுத்தனர்.
24
கொழும்புக்கு செல்லும் பயணம் ரத்து
பறவை மோதியதால் விமானத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டதால் அந்த விமானம் 143 பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் சென்னை வந்தது. சென்னை விமான நிலையத்தில் விமானத்தை மீண்டும் பரிசோதனை செய்தபோது விமானத்தின் பேன் பிளேடில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த விமானம் மீண்டும் கொழும்புக்கு செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டது.
34
பயணிகள் அதிர்ச்சி
விமானத்தில் பறவை மோதியதும் அதன் காரணமாக அது பழுதடைந்ததும் பயணிகளுக்கு தெரியாது. தரையிறங்கிய பிறகு இந்த தகவலை அறிந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பறவை மோதி பேன் பிளேடு சேதம் அடைதிருந்த நிலையில், நல்ல வேளையாக விமானம் பறக்கும்போது எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. விமானம் சேதம் அடைந்திருந்த நிலையில், கொழும்பில் விமானத்துக்கு பாதிப்பில்லை என பொறியாளர்கள் எப்படி கூறினார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 260 பேர் உயிரிழந்தனர்.
இந்தியா மட்டுமின்றி உலகையே உலுக்கிய இந்த விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்கள் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.