ஆவின் பால் சர்ச்சை
குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் ஊட்டச்சத்திற்கு முக்கிய தேவையாக இருப்பது பாலாகும். அந்த வகையில் தமிழகத்தில் ஆவின் பால் அனைத்து தரப்பு மக்களும் வாங்கி வருகின்றனர். சந்தானது மட்டுமின்றி குறைந்த விலையில் கிடைப்பதாலும் பெரும்பாலன மக்கள் ஆவின் பால் வாங்கி வருகின்றனர், அந்த வகையில் பல நிறங்களில் கொழுப்பு சத்தின் அளவை பொறுத்து ஆவின் பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 4.5% கொழுப்பு சத்துள்ள 500மிலி (MRP 22.00) நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற (Green Magic) பால் பாக்கெட்டில் பாலின் அளவை 450மிலி ஆக குறைத்து,
Aavin milk
மறைமுகமாக விலை உயர்வு
Green Magic Plus என பெயர் மாற்றம் செய்து 25.00ரூபாயாக விற்பனை விலையாக நிர்ணயம் செய்து லிட்டருக்கு 11.00ரூபாய் உயர்த்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. மக்களை ஏமாற்றும் வகையில் மறைமுகமாக விற்பனை செய்ய திட்டமிட்டதாகவும், முதல் கட்டமாக திருச்சியில் இந்த பால் பாக்கெட் விற்பனை தொடங்கியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக எதிர்ப்புகளும் எழுந்தது. பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பச்சை உறை பாலில் உள்ள அதே 4.5% கொழுப்புச் சத்து,
aavin milk
அன்புமணி கண்டனம்
அதே 9 % கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் (Solids Not Fat -SNF) கொண்ட பாலை ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் திருச்சி மண்டலத்தில் ஆவின் அறிமுகம் செய்துள்ளது. கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலின் விலையை மறைமுகமாக உயர்த்தும் ஆவின் நிறுவனத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் ஆவின் நிர்வாகம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால்) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
Aavin milk
ஆவின் விளக்கம்
மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும் மற்றும் பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பொது மக்களிடம் கருத்துக்களையும் கேட்கப்பட உள்ளது. மேலும் எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் வகைகளை விற்பனை தொடங்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.