நாமக்கல் மாவட்டம், சாலப்பாளையம் கிராமத்தில் சுமார் 1,000 காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டியை அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடக்கிவைத்தார்.முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைக்க வந்த எடப்பாடி பழனிசாமியை சாலையின் இரு புறங்களிலும் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்றனர்.
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அவர்கள், ‘’நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ரெட்டிப்பட்டி சாலப்பாளையம் கிராமத்தில் இன்று தமிழக பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பேணிக் காப்போம் என்றும் விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்யமாட்டோம் என்றும் வீரர்களான நாங்கள் சிறந்த நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்றும் இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவோம்’’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.