இந்த பின்னணியில் டெல்லியில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்ட கூட்டம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என சுமார் 40 பேர் கலந்து கொண்டார்கள். இந்தச் சந்திப்பு வழக்கமான ஆலோசனை கூட்டமாக இல்லாமல், தமிழக காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக கேள்விகள் எழுப்பப்பட்ட ஒரு ஆபரேஷன் மீட்டிங்காகவே மாறியதாக சொல்லப்படுகிறது. கூட்டத்தில் ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பியிருக்கிறார்.
கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி போன்ற தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வளர்ந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் வளர்ச்சி இல்லை? கடந்த ஆண்டுகளில் எம்பிக்களும் எம்எல்ஏக்களும் கட்சி வளர்க்க என்ன செய்து இருக்கீங்க என அவர் நேரடியாகவே கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்தபோதும், அந்த பதில்களால் ராகுல் காந்தி திருப்தி அடையவில்லை என்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் காங்கிரஸ் எம்.பி.,யிடம், அவரது தொகுதியில் உள்ளபூத் ஏஜென்ட்கள் மற்றும் பூத் கமிட்டிகள் செயல்பாடு குறித்து ராகுல் காந்தி கேட்டபோது அவர் தெளிவான பதில் அளிக்க தவறியதாகச் சொல்கிறார்கள்.