
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே வெயில் வாட்டி எடுத்து வந்தது. வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? வருண பகவான் கருணை காட்ட மாட்டாரா? என மக்கள் ஏங்கித்தவித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவாலாக மழை பெய்து வரும் நிலையில், இப்போது மற்ற மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ''தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 -26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு- மத்தியமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், தெற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், கர்நாடகா-கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், இப்பகுதிகளுக்கு மீனவர்களுக்கு இன்று செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.