முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேற்று முன்தினம் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். லேசான தலைச்சுற்றல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
24
முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அப்பல்லோ மருத்துவமனை, ''மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் தொடர்பான அறிகுறிகளைக் கண்காணிப்பதற்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு வேறு சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன'' என்று தெரிவித்து இருந்தது.
முதல்வரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல்நலன் விசாரித்தனர். மேலும் திமுகவின் மூத்த அமைச்சர்களும் முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக நலம் விசாரித்தனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய கடவுளை வேண்டுவதாக தெரிவித்து இருந்தார்.
34
உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்
''இரண்டு, மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக பணிகள் இருந்ததால் ரோட் ஷோ உள்ளிட்டவற்றில் முதல்வர் கலந்து கொண்டதால் சிறிது உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு இப்போது முதல்வர் நன்றாக உள்ளார். மருத்துவர்கள் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்'' என்று மு.க.ஸ்டாலினின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்தாலும் கடமை
இப்போது மருத்துவமனையில் ஓய்வில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனித்து வருகிறார். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே பயனாளிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். இப்படியாக மருத்துவமனையிலும் முதல்வர் பம்பரமாக சுழன்று பணிகளை கவனித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபோது என்ன நடந்தது? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரர் மு.க.முத்து மறைவால் ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்துள்ளார். ஆனால் அதற்கு மறுநாளே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை நடைபயணம் மேற்கொண்டபோது முதல்வருக்கு தலைசுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை; அவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளார். முதல்வர் எப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவலை அப்போலோ மருத்துவமனை வெளியிடும்'' என்றார்.