
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 5,788 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ. மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் மாணவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்ட உடற்கல்வி ஆசிரியர் வளநூல் எனும் புத்தகத்தை அவர் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ''பள்ளிகளில் இருந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டுவது என்பது மிக, மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். இதனைத் தொடர்ந்து செய்து வருகின்ற பள்ளிக்கல்வித்துறைக்கு முதலில் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விளையாட்டு கற்றுக் கொடுப்பது இதுதான்
பாடப் புத்தகத்தில், பாடத்திட்டத்தில் (Syllabus) இருந்து கிடைக்கின்ற கல்வி மட்டுமல்ல, விளையாட்டின் மூலமும் நிறைய விஷயங்களை மாணவர்கள் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். கூட்டுறவு, குழுப்பணி, நம்பிக்கை, நட்பு, உத்தி, திட்டமிடல், செயல்படுத்தல் (Co-Operation, Team Work, Confidence, Friendship, Strategy, Planning, Execution,) என வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை குணங்களையும் நமக்கு விளையாட்டு நமக்கு கற்றுக் கொடுக்கிறது.
கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் விளையாட்டிலும் உங்களுடைய கவனம் இருக்க வேண்டும். விளையாட்டு என்றால், தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் தவறாமல் நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். எப்போதாவது விளையாட்டு மைதானம் பக்கம் தலைகாட்டினால் போதுமென்று மட்டும் இருந்து விடக்கூடாது.
நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய திறமை உங்களை அறியாமலேயே அது கூடிக்கொண்டே போகும். நீங்கள் அடுத்தடுத்த உயரங்களை தொடுவதற்கு தொடர்ந்து நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். மென்மேலும் போட்டிகளில் அதிகமாக பங்கேற்க வேண்டும்.
விடாமுயற்சியை விடாதீர்கள்
என்ன இடையூறு வந்தாலும், உங்களுடைய விடாமுயற்சியை நீங்கள் தயவு செய்து கைவிடாதீர்கள். உங்களுக்கு அனைத்து வகையிலும் திராவிட மாடல் அரசு துணை நிற்கும். நீங்கள் வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு சென்று விளையாடுகின்ற போது, உங்களுக்காக உதவிட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை என்றைக்குமே உங்களுக்கு துணை நிற்கும்.
அதன் மூலம், நிதி உதவி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு என்றைக்கும் உதவிகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகின்றோம். ஆகவே, நீங்கள் அத்தனை பேரும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்காக tnchampions.sdat.in என்கிற இணையதளத்தில் நீங்கள் என்றைக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்'' என்று தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சின் கடைசியில், ''பல நிகழ்ச்சிகளில் உங்களிடம் பலமுறை நான் சொல்லியிருக்கின்றேன். அதாவது மாணவர்களின் சார்பாக teachersகிட்ட ஒரே ஒரு கோரிக்கை தான். PT period-ஐ எந்த டீச்சரும் தயவு செய்து கடன் வாங்கி அதில் பாடம் நடத்தாதீர்கள். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் வைத்துக் கொண்டு தான் இந்த கோரிக்கையை வைக்கின்றேன். வேண்டுமென்றால், அறிவியல், கணித ஆசிரியர்கள் (Science, Maths teachers) உங்களோட பாடநேரத்தில் (பீரியட்டில்), மாணவர்களுக்கு தயவு செய்துவிளையாட்டு பாட நேரத்திற்கு (PT period-ஐ) கடன் கொடுங்கள்.
கைதட்டி சிரித்த மாணவிகள்
ஏனென்றால் விளையாட்டு பாட நேரத்திற்கு (PT period) என்பது ஒவ்வொரு மாணவருடைய உரிமை. அதில் நிச்சயமாக நீங்கள் விளையாட வேண்டும். விளையாட்டு பயிற்சிக்கு (Sports Practiceக்கு) நீங்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கே இவ்வளவு மாணவர்கள் பதக்கங்கள் வாங்கி இருக்கிறதை பார்க்கும்போதே எனக்கு தெரிகிறது, இப்போதெல்லாம் விளையாட்டு பாட நேரத்தில் நீங்கள் விளையாட அனுமதிக்கிறீர்கள் என்பதை எங்களால உணர முடிகிறது, புரிந்து கொள்ள முடிகிறது'' என்றார். உதயநிதி ஸ்டாலின் PT periodகுறித்து பேசும்போது மாணவ, மாணவிகள் கைதட்டி சிரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.