சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு பரங்கிமலை வழியாக விமான நிலையம் வரையிலும், விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பூந்தமல்லி–போரூர் வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
24
மக்களுக்கு கைகொடுக்கும் மெட்ரோ ரயில்கள்
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் அமைந்துள்ளன. இதுமட்டுமின்றி மழை, வெள்ளம் போன்ற காலங்களில் மெட்ரோ ரயில்கள் பெரிதும் கைகொடுத்து உதவுகின்றன. இதன் காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
34
நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 1,03,78,835 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11,58,910 பயணிகள் அதிகமாக பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நமது நாட்டின் சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் (ஆகஸ்ட் 15ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாளை விடுமுறை நாள் என்பதால் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சுதந்திர தினத்தையொட்டி, நாளை (ஆகஸ்ட் 15) ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேர இடைவெளிகள் பின்வருமாறு: நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணிவரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.