பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் முக்கிய பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்து வந்தது. இதை பூக்கடை பேருந்து நிலையம் அல்லது பாரிஸ் என்றும் அழைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் அங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தற்போது கோயம்பேடு பகுதி நகரின் மையப்பகுதியாக உள்ளதால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்
சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது. தற்போது தமிழகத்திற்கு தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்கள் மற்றும்
பெரும்பாலான பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் மாநகர பேருந்துகள் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்த பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த இடம் முழுவதுமாக அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இப்பேருந்து நிலையத்தை இடித்து, நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக மாற்ற சென்னை மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது.
இதற்காக ரூ.823 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக ரூ. 5 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை.
இந்நிலையில் தீவுத்திடலுக்கு பதிலாக பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரம் என்ஆர்டி மேம்பாலம் அருகே தற்காலிமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறுகையில்: தீவுத்திடலில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே, ராயபுரம் அருகே சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிமகாக அமைக்கப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளோம். தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டர் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றார்.