அவமானப்பட்ட இடத்தில் சாதித்த ஷர்துல் தாக்கூர்! பூரன் ருத்ரதாண்டவம்! சன்ரைசர்ஸை வீழ்த்திய LSG
ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
IPL: LSG beat SRH: ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய 7வது ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.அதிரடி வீரர் அபிஷேக் சர்மா 6 ரன்னில் ஷர்துல் தாக்கூர் பந்தில் கேட்ச் ஆனார். மற்றொரு அதிரடி வீரர் இஷான் கிஷான் வந்த வேகத்தில் ஷர்துல் தாக்கூர் பந்தில் டக் அவுட் ஆனார்.
ஓரளவு பந்துகளை விளாசித் தள்ளிய டிராவிஸ் ஹெட் 28 பந்தில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்து பிரின்ஸ் யாதவ் பந்தில் கிளீன் போல்டானார். இதன்பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முழுமையாக முடங்கியது. ஹென்ரிச் கிளாசன் (26 ரன்), நிதிஷ்குமார் ரெட்டி (32 ரன்) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.அன்கீத் வர்மா 13 பந்தில் 5 சிக்சர்களுடன் 36 ரன்கள் விளாசினார். கடைசியில் பேட் கம்மின்ஸ் 4 பந்தில் 3 சிக்சர்களுடன் 18 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழந்து 190 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார்.
பின்பு சவாலான இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி தொடக்கத்திலேயே ஏய்டன் மார்க்ரம் (1 ரன்) விக்கெட்டை இழந்தது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த மிட்ச்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடியில் வெளுத்துக் கட்டினார்கள். குறிப்பாக சிக்சர் மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன் பேட் கம்மின்ஸ், ஆடம் ஜாம்பா, சிமர்ஜீத் சிங் என அனைவரது ஓவர்களிலும் இரக்கமின்றி சிக்சர்களை விளாசினார்.
பவுலிங்கில் கலக்கிய 'லார்ட்' ஷர்துல் தாகூர்! ஹைதராபாத்தை 200 ரன்களுக்குள் முடக்கிய லக்னோ!
வெறும் 18 பந்துகளில் அரைவிளாசிய பூரன் 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 26 பந்தில் 70 ரன்கள் எடுத்து பேட் கம்மின்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். மறுமுனையிலும் அதிரடியாக ஆடிய மிட்ச்செல் மார்ஷ் 31 பந்தில் 51 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். இதற்கிடையே ரிஷப் பண்ட் 15 ரன்னில் ஹர்சல் படேல் பந்தில் கேட்ச் ஆனார். இறுதிக்கட்டத்தில் டேவிட் மில்லர் (7 பந்தில் 13 ரன்), 2 சிக்சர்கள் விளாசிய அப்துல் சமாத் (8 பந்தில் 22 ரன்கள்) அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். லக்னோ அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முதல் வெற்றியாகும். அதே வேளையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் தோல்வியாகும். இந்த போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. முன்கூட்டியே திட்டமிட்டு சரியான லைன் அண்ட் லெந்த்தில் பந்து வீசியதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. 4 விக்கெட் வீழ்த்தி லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய ஷர்துல் தாக்கூர் ஆட்டநாயகன் விருது வென்றார்.
ஷர்துல் தாக்கூர் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரராக இருந்தார். ஆனால் ஐபிஎல் மெகா நட்சத்திர ஏலத்தில் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. சிஎஸ்கே அணியும் வரை கைகழுவியது. ஆனால் ஷர்துல் தாக்கூர் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் தான் யாரென்று நிரூபித்தார். ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் ஷர்துல் தான். அந்த சீசனில் ஐந்தாவது அதிக ரன் எடுத்தவரும் அவர் தான். இதன்பிறகு சில வீரர்கள் காயம் காரணமாக ஷர்துல் தாக்கூரை லக்னோ நிர்வாகம் அணியில் எடுத்தது. இப்போது தான் பட்ட அவமானத்துக்கு பதிலடி கொடுத்து தான் யாரென்று நிரூபித்துள்ளார் ஷர்துல் தாக்கூர்.
ஐபிஎல்: 14வது பிறந்தநாள் கொண்டாடிய ராஜஸ்தான் வீரர்! ரசிகர்கள் வாழ்த்து மழை!